மோடியும், முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் பீகாரை கொள்ளையடித்தனர் - ராகுல்காந்தி

மோடியும், முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் சேர்ந்து பீகாரை கொள்ளையடித்தனர் என்றும், புலம்பெயர் தொழிலாளர்களை புறக்கணித்தனர் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மோடியும், முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் பீகாரை கொள்ளையடித்தனர் - ராகுல்காந்தி
Published on

பாட்னா,

பீகார் சட்டசபை 3-வது கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று பிரசாரத்தை தொடங்கினார். கதிஹார் என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

அதில் பேசிய அவர், பிரதமர் மோடியும், பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்ல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்தபோது எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி, அந்த தொழிலாளர்களுக்காக பஸ்களை ஏற்பாடு செய்தது. காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் இல்லாததால், லட்சக்கணக்கானவர்களுக்கு உதவ முடியவில்லை. எங்களால் இயன்றவரை உதவி செய்தோம்.

இங்கு வந்திருக்கும் இளைஞர்களை கேட்கிறேன். பிரதமர் மோடி, 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக கூறினார். நிதிஷ்குமாரும் அதையே கூறினார். ஆனால், வேலை என்ன ஆனது? இளைஞர்கள் இன்னும் ஏன் வேலையின்றி இருக்கிறார்கள்?

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண்மை சட்டங்களால், பிரதமர் மீது விவசாயிகள் கோபமாக உள்ளனர். மோடி, அம்பானி, அதானி ஆகியோரின் உருவ பொம்மைகளை தசரா தினத்தில் பஞ்சாப் விவசாயிகள் எரித்தனர். நாட்டின் மொத்த சோளத்தில் 20 சதவீத சோளம் பீகாரில்தான் உற்பத்தி ஆகிறது. ஆனால், மக்காசோளத்துக்கு உரிய விலை கிடைக்கிறதா?

பிரதமர் அறிவித்த பணமதிப்பு நீக்கத்தால் ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சில கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பலன் அடைந்தன. ஜி.எஸ்.டி.யால் பெட்டிக்கடைக்காரர்கள் பாதிக்கப்பட்டனர்.

மோடியும், நிதிஷ்குமாரும் சேர்ந்து பீகாரை கொள்ளையடித்துள்ளனர். இது பீகார் இளைஞர்களுக்கும் தெரியும். எனவே, அவர்களை ஆட்சியை விட்டு துரத்தும் வகையில், எங்கள் கூட்டணிக்கு ஓட்டுப்போட பீகார் இளைஞர்களும், விவசாயிகளும் முடிவு செய்து விட்டனர் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com