

புதுடெல்லி,
இந்தியாவின் இளைஞர் சக்தி குறித்து உலகம் பேசுகிறது. அவர்களின் திறன்களை உலகம் அங்கீகரிக்க தொடங்கியுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க, 'பிரதம மந்திரி விக்சித் பாரத் வேலைவாய்ப்பு திட்டம்' கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் 15 லட்சம் ஊழியர்களுக்கான தவணையாக 2,400 கோடி ரூபாயை பிரதமர் மோடி இன்று விடுவித்தார்.
டெல்லி விஞ்ஞான் பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு ஊக்கத்தொகையை நேரடியாக விடுவித்தார்.
டெல்லியில் ரூ.15,000 ஊக்கத்தொகையை விடுவித்த பின் பிரதமர் மோடி பேசியதாவது:-
பிரான்ஸ், ஸ்லோவேக்கியா பயணத்தை முடித்துக் கொண்டு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் திரும்பினேன். ஜி7 மாநாட்டில் வளர்ந்த நாடுகளின் தலைவர்களை சந்தித்தேன்.
இந்தியாவின் இளைஞர் சக்தி குறித்து உலகம் பேசுகிறது. அவர்களின் திறன்களை உலகம் அங்கீகரிக்க தொடங்கியுள்ளது. இதுபோன்ற நேரத்தில், ஒவ்வொரு இந்திய இளைஞரும் தனது ஆற்றலையும் வாய்ப்புகளாக மாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த நோக்கத்துடன், பிரதம மந்திரி விக்சித் பாரத் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இன்று, உலகமே இந்தியாவிற்கான கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. முன்பு, ஒரு ஜன்னல் கூட திறக்கப்படவில்லை. இந்தியா சுமார் 40 நாடுகளுடன் கையெழுத்திட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தங்கள் புதிய சந்தைகளை உருவாக்கி, அவற்றுக்கான அணுகலை வழங்குகின்றன.
உலகளவில் 'மேக் இன் இந்தியா' பிராண்டுகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன, எனவே, இந்த வாய்ப்புகளை நாம் தவறவிடக்கூடாது. உலகில் நிலைத்து நிற்க, நாம் உலகின் சிறந்த தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். உலகளவில் முன்னேற, சிறப்பை நமது அடையாளமாக நாம் நிலைநிறுத்த வேண்டும். இன்று, இந்தியா மீது உலக நாடுகள் அதிக எதிர்பார்ப்புகளை நோக்கி உள்ளன.
உலகம் எதிர்காலப் பொருளாதாரத்திற்குத் தயாராகி வருகிறது, இந்தியாவோ எதிர்காலப் பொருளாதாரத்திற்குத் தலைமை தாங்கத் தயாராகி வருகிறது. உலகம் எதிர்காலத் தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, இந்தியாவோ தனது இளைஞர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்த உழைத்து வருகிறது. இது இந்திய இளைஞர்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பாகும், இந்த வாய்ப்பை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.