

புதுடெல்லி,
இமயமலை பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோவிலில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர். இந்த ஆண்டுக்கான யாத்திரையை ஜம்மு-காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்கா, அங்குள்ள பகவதி நகர் அடிவார முகாமில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்காக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த யாத்திரை, வருகிற ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி நிறைவடைகிறது.
அமர்நாத் செல்லும் பக்தர்களுக்காக பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கூறியருப்பதாவது:-
அமர்நாத் யாத்திரை ஒரு மத பயணத்தை விட மேலானது. இது இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை விவரிக்கிறது. இந்த புனித யாத்திரை 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை பிரதிபலிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களை அன்போடும் உபசரிப்போடும் வரவேற்கும் ஜம்மு-காஷ்மீர் மக்களை பாராட்டுகிறேன்.
யாத்திரை சீராக நடை பெறுவதை உறுதி செய்வதில் ஈடுபட்டிருந்த ராணுவம், போலீசார், பேரிடர் மீட்பு குழுக்கள், சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணிய ளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு நன்றி.
பிரதமர் இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
அமர்நாத் யாத்திரையின் போது இயற்கையை பாதுகாப்பது உள்ளிட்ட 5 முக்கிய அன்பு கட்டளைகளை பின்பற்றுமாறு பக்தர்களிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டு உள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
* இமயமலை பகுதி மற்றும் புனித யாத்திரை பாதைகளின் தூய்மையை பேணி, அவற்றின் இயற்கை அழகை பாதுகாக்க வேண்டும்.
* அதிகாரிகளால் வெளியிடப்படும் அனைத்து போக்குவரத்து மற்றும் பாது காப்பு அறிவுரை களை யும் பின்பற்ற வேண்டும்.
* ஜம்மு- காஷ்மீரில் வாழ்வாதாரங்களை வலுப்படுத்த, உள்ளூர் தயாரிப்புகளையும் வணிகங்களையும் ஆதரிக்க வேண்டும்.
* புனித பயணம் முடித்து வீடு திரும்பியதும், குடும்ப உறுப்பினர்கள் அல்லது அன்புக்குரியவர்களின் பெயரில் ஒரு மரக்கன்றை நடுங்கள்.
* யாத்திரையின் போது ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வை ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.