

புதுடெல்லி,
ஆன்மிக தொடர்பு மற்றும் புத்த பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் மங்கோலிய நாட்டில் நிறுவப்பட்டுள்ள தங்கத்திலான புத்தர் சிலையை பிரதமர் மோடியும், மங்கோலிய அதிபரும் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தனர்.
மங்கோலிய நாட்டு அதிபர் கால்ட்மாகின் பட்டுல்கா 5 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்துக்கு சென்ற அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
அப்போது, மங்கோலிய தலைநகர் உலான்பாதரில் உள்ள கண்டன் மடத்தில் நிறுவப்பட்டுள்ள தங்கத்திலான புத்தர் சிலையை, இரு தலைவர்களும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தனர். கையில் கிண்ணம் வைத்திருப்பது போன்று இந்த சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மூத்த துறவி ஒருவர் பங்கேற்று, பிரார்த்தனை செய்து முறைப்படி சிலை திறப்பை அறிவித்தார். மோடியும், மங்கோலிய அதிபரும் பட்டனை அழுத்தி சிலையை திறந்து வைத்து வணங்கினர். பின்னர் புத்த துறவி, மோடிக்கு பட்டாடை மற்றும் புத்தர் சிலையை வழங்கி கவுரவித்தார்.
இந்தியா- மங்கோலியா இடையிலான ஆன்மிக தொடர்பு மற்றும் புத்த பாரம்பரியத்தை பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த சிலை திறப்பு விழா நடைபெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.