ராம் ஜெத்மலானி மனதில் உள்ளவற்றை பேசும் ஆற்றல் கொண்டவர்; பிரதமர் மோடி புகழாரம்

ராம் ஜெத்மலானி மனதில் உள்ளவற்றை பேசும் ஆற்றல் கொண்டவர் என பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்து உள்ளார்.
ராம் ஜெத்மலானி மனதில் உள்ளவற்றை பேசும் ஆற்றல் கொண்டவர்; பிரதமர் மோடி புகழாரம்
Published on

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் பிரபல வழக்கறிஞராக அறியப்பட்ட ராம் ஜெத்மலானி (வயது 95) உடல்நல குறைவால் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதேபோன்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மற்றும் நாடாளுமன்ற மேலவை எம்.பி. சுப்பிரமணியசுவாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

ராம்ஜெத்மலானியின் மறைவு பற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், ராம் ஜெத்மலானியின் சிறந்த விசயங்களில் ஒன்று அவர் தனது மனதில் உள்ளவற்றை பேசும் ஆற்றல் கொண்டவர். எந்தவித அச்சமும் இன்றி அதனை செய்து வந்தவர்.

அவசரநிலை காலங்களில் பொதுமக்களின் சுதந்திரத்திற்காக அவர் போராடிய விசயங்கள் நினைவு கூரத்தக்கவை. தேவையானோருக்கு உதவுவது என்பது அவரது தனித்தன்மையில் ஒருங்கிணைந்த பகுதியாக விளங்கியது.

அவருடன் உரையாட எண்ணற்ற சந்தர்ப்பங்கள் அமைந்தது எனது அதிர்ஷ்டம் என்றே நான் நினைத்து கொள்கிறேன். இந்த சோக தருணங்களில், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பல நலம் விரும்பிகளுக்கும் எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.

அவர் இங்கு இல்லையென்றாலும் அவரது சிறந்த பணிகள் உயிர்ப்புடன் இருக்கும். ஓம் சாந்தி என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com