விரைவில் சட்டமன்ற தேர்தல்: உத்தரப்பிரதேசத்துக்கு ஒரே மாதத்தில் நான்காவது முறையாக பிரதமர் பயணம்..!

உத்தரப்பிரதேசத்தில் புதிய சர்வதேச விமான நிலைய பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.
விரைவில் சட்டமன்ற தேர்தல்: உத்தரப்பிரதேசத்துக்கு ஒரே மாதத்தில் நான்காவது முறையாக பிரதமர் பயணம்..!
Published on

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலத்தில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதை மனதில்கொண்டு, அங்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது மத்திய பா.ஜ.க அரசு. உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், மூன்று நாள் பயணமாக, கடந்த நவம்பர் 19-ம் தேதி உத்தரபிரதேசம் சென்றார் பிரதமர் மோடி. இந்த மூன்று நாட்களில், ஜான்சியில் 3,425 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அதோடு, மற்ற சில இடங்களிலும் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அதேபோல, டி.ஜி.பி-க்கள் மாநாடு உள்ளிட்ட சில அரசு விழாக்களிலும் அவர் கலந்துகொண்டார்.

பிரதமர் மோடியின் மூன்று நாள் உத்தரப்பிரதேச பயணத்தில்ன் போது அம்மநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றைப் பதிவிட்டிருந்தார் யோகி. அந்த கவிதையின் மூலம், `புதிய இந்தியாவை உருவாக்க ஆலோசனையில் ஈடுபட்டிருந்தோம்' என அவர் கூறியிருந்தார் . அந்த கவிதை வரிகளோடு, யோகியின் தோளில் கைபோட்டபடி நடந்துகொண்டே மோடி ஆலோசனை வழங்கியது போன்ற புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருந்தன. இந்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, ஜெவாரில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலைய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த விமானநிலையம் கட்டமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், நாட்டில் அதிக சர்வதேச விமான நிலையங்களை கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி, பிரதமர் மோடி உத்தரபிரதேசத்துக்கு தொடர் பயணம் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு மாதத்தில் நான்காவது முறையாக உத்தரபிரதேசத்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com