

புதுடெல்லி,
பிரதமர் மோடி நாளை வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் திரிபூராவுக்கு செல்கிறார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிரதமர் மோடி நாளை மணிப்பூர் மற்றும் திரிபூரா மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மணிப்பூர் மாநிலத்தில் பராக் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஸ்டீல் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். மேலும், அங்கு புதுப்பிக்கப்பட்ட கோவிந்தா ஜி கோயிலையும் திறந்து வைக்க உள்ளார். மணிப்பூர் மாநில தலைநகர் இம்பால் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட அமைக்கப்பட்ட ரூ.280 கோடி மதிப்பிலான தவ்பல் பல்நோக்கு திட்டத்தினை திறந்து வைக்க உள்ளார்.
மேலும், திரிபூரா மாநிலத்தில் தலைநகர் அகர்தலாவில் மகராஜா பீர் பிக்ரம் விமானநிலையத்தில் ரூ.450 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இது 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய நவீன கட்டிடம் ஆகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.