

புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலி மேற்கு வங்காளத்தில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி காரணமாக கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மருத்துவர் அப்தாப் கான், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அடுத்த 24 மணி நேரத்துக்கு கண்காணிப்பில் இருப்பார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது சுயநினைவுடன் இருக்கிறார். அவரது இருதயத்தில் 2 அடைப்புகள் உள்ளன. அதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்படும். தற்போதைய நிலையில் அவர் சீராக இருக்கிறார் என்று தெரிவித்தார். .
இதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சவுரவ் கங்குலியின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சவுரவ் கங்குலியுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு முன்னதாக பிரதமர் மோடி, கங்குலியின் மனைவியான டோனா கங்குலியுடனும் பேசினார். அவர் உடல்நிலை குறித்து விசாரித்து, விரைவாக குணமடைய விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.