மிமிக்ரி விவகாரம்.. குடியரசு துணைத் தலைவரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி

மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர்போல மிமிக்ரி செய்து, கிண்டல் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
மிமிக்ரி விவகாரம்.. குடியரசு துணைத் தலைவரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

நாடாளுமன்ற அத்துமீறல், எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டம், சஸ்பெண்ட் நடவடிக்கை என குளிர்கால கூட்டத்தொடரில் தொடர்ந்து பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலுக்குப் பிரதமர் மோடியும், உள்துறை மந்திரியும் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் 141 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவை உறுப்பினர்களை குடியரசு துணைத் தலைவரும், அவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து, நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் போல மிமிக்ரி செய்து, கிண்டல் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

அந்த வீடியோவில், கல்யாண் பானர்ஜியின் செயலை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது செல்போனில் படம் பிடிப்பது தெரிகிறது. அந்த வீடியோவை பாஜக தனது எக்ஸ் தளத்தில் ஷேர் செய்து, எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்ததற்கு இதுபோன்ற செயல்கள்தான் காரணம் என கூறியிருந்தது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இந்த செயலால் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கடும் அதிருப்தியில் உள்ளார். அவரை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக ஜெகதீப் தன்கர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது புனிதமான நாடாளுமன்ற வளாகத்தில் சில உறுப்பினர்களின் கேவலமான நடத்தைகள் குறித்து அவர் மிகுந்த வேதனை தெரிவித்தார். மேலும், கடந்த 20 ஆண்டுகளாக இதுபோன்ற அவமானங்களுக்கு தானும் ஆளாகியிருப்பதாக தெரிவித்தார். ஆனால் குடியரசு துணைத் தலைவர் போன்ற அரசியலமைப்பு அதிகாரத்தில் இருப்பவர் மீது, அதுவும் நாடாளுமன்றத்தில் இப்படி நடந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் கூறினார்.

அதற்கு பதிலளித்த நான் 'ஒரு சிலரின் கோமாளித்தனங்கள் எனது கடமையைச் செய்வதிலிருந்தும், நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கொள்கைகளை நிலைநிறுத்துவதிலிருந்தும் என்னைத் தடுக்காது. எந்த அவமானமும் என் பாதையை மாற்றாது' என்றேன்.

இவ்வாறு ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசு துணைத் தலைவர் அவமானப்படுத்தப்பட்ட விதத்தைப் பார்த்து மனம் நொந்து போனதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களின் கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்தவேண்டும். ஆனால் அது கண்ணியம் மற்றும் மரியாதையை பேணும்வகையில் இருக்க வேண்டும். அதுதான் நாம் பெருமைப்படும் நாடாளுமன்ற பாரம்பரியம். அதை அவர்கள் நிலைநாட்ட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" என குடியரசு தலைவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com