குடியரசு தின நிகழ்ச்சியில் கவர்னர் பேசிக்கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்த காவல் ஆணையர்

கவர்னரின் அருகில் நின்று கொண்டிருந்த திருவனந்தபுரம் காவல் ஆணையர், திடீரென மயங்கி விழுந்தார்.
திருவனந்தபுரம்,
நாட்டின் 76-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் கவர்னர்கள் தேசிய கொடியேற்றி வைத்தனர். அந்த வகையில், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர் கொடியேற்றினார். பின்னர் கவர்னர் உரையாற்றிக்கொண்டு இருந்தார்.
அப்போது அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த திருவனந்தபுரம் காவல் ஆணையர் தாமஸ் ஜோஸ், திடீரென மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த காவலர்கள், மயங்கி விழுந்த காவல் ஆணையரை அங்கிருந்து வேறு இடத்திற்கு தூக்கி சென்றனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, காவல் ஆணையர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதன் பின் மீண்டும் அவர் நிகழ்ச்சிக்கு திரும்பினார். குடியரசு தின நிகழ்ச்சியில் காவல் ஆணையர் திடீரென மயங்கி விழுந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்புடன் காணப்பட்டது.