நடிகர் சுரேஷ் கோபி மீது பெண் செய்தியாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு

தனது செயல் பெண் பத்திரிகையாளரை மனதளவில் காயப்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக நடிகர் சுரேஷ் கோபி தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கோழிக்கோடு,

கேரளாவில் பிரபல நடிகர் மற்றும் பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யான சுரேஷ் கோபி கோழிக்கோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பெண் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு கோபி பதிலளிக்கும்போது, மகளே (மோலே) என கூறி நிருபரின் தோள் மீது கை வைத்துள்ளார். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்தது.

அவரது இந்த செயலால், அந்த பெண் நிருபர் பின்னால் நகர்ந்து சென்றார். இதன்பின், 2-வது கேள்வியை அந்த பெண் நிருபர் கேட்டுள்ளார். அப்போதும், அவருடைய தோள் மீது தன்னுடைய கையை கோபி வைத்திருக்கிறார். இந்த முறை அவருடைய கையை பெண் நிருபர் தள்ளி விடும் காட்சிகள் காணப்படுகின்றன. இந்த வீடியோ வைரலானதும் பரபரப்பானது.

இந்நிலையில், நடிகர் சுரேஷ் கோபி சமூக ஊடகம் வழியே வெளியிட்ட பதிவில், நட்பு ரீதியிலேயே அந்த பெண் நிருபரிடம் நடந்து கொண்டேன். அவர் அதனை தவறாக எண்ணினார் என்றால், அவருடைய உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.அவர் இதனை மோசம் என உணருவார் என்றால், அவரிடம் இதற்காக மன்னிப்பு கோருகிறேன். வருந்துகிறேன்... என பதிவிட்டிருந்தார்.

எனினும், இதுதொடர்பாக பெண் நிருபர் கூறும்போது, அவர் கேட்டுள்ள மன்னிப்பு, மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக விளக்கம் அளிப்பது போன்று உள்ளது. அவருக்கு எதிராக சட்ட ரீதியாக அணுக உள்ளேன் என்று தெரிவித்தார்.

மேலும் கேரள பத்திரிகையாளர்கள் அமைப்பின் மாநில தலைவர் வினீதா மற்றும் பொது செயலாளர் கிரண் பாபு ஆகியோர், தவறை ஒப்பு கொண்டு சுரேஷ் கோபி மன்னிப்பு கேட்க வேண்டும் என அதுபற்றி வெளியிட்ட ஊடக செய்தியில் தெரிவித்து உள்ளனர். இந்த விவகாரம் பற்றி கோழிக்கோடு நகர ஆணையாளரிடம் புகார் ஒன்றையும் அந்த பெண் நிருபர் அளித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சுரேஷ் கோபி மீது பெண் செய்தியாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com