டெல்லியில் போலீஸ்-வக்கீல்கள் மோதல்: நீதி விசாரணைக்கு உத்தரவு - ஐகோர்ட்டு நடவடிக்கை

டெல்லியில் போலீஸ்-வக்கீல்கள் இடையே நடந்த மோதல் தொடர்பாக நீதி விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
டெல்லியில் போலீஸ்-வக்கீல்கள் மோதல்: நீதி விசாரணைக்கு உத்தரவு - ஐகோர்ட்டு நடவடிக்கை
Published on

புதுடெல்லி,

டெல்லியில் திஸ் ஹசாரி கோர்ட்டு வளாகத்தில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை), கைதிகளை ஏற்றிவந்த சிறை வாகனம் மீது வக்கீல் ஒருவரின் கார் மோதியது. இதில் அந்த வக்கீலை பிடித்து போலீசார் சிறை பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் போலீசாருக்கும், வக்கீலுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. பிரச்சினை, துப்பாக்கிச்சூடு நடத்துகிற அளவுக்கு சென்றது. 17 வாகனங்கள் அடித்து நொறுக்கி, தீ வைத்து கொளுத்தப்பட்டன. 20 போலீசார் மற்றும் வக்கீல்கள் பலரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த மோதல் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி, மூத்த நீதிபதிகள், மூத்த போலீஸ் அதிகாரிகள், டெல்லி அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் ஆகியோர் கலந்து கொண்ட உயர்மட்ட கூட்டம், மூடிய அறைக்குள் நடந்தது.

அந்த கூட்டத்தை தொடர்ந்து இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த முடிவானது.

அதன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்தபோதும், டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.என்.படேல் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரத்தில் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது.

விசாரணையின்போது, இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிப்பதாக டெல்லி போலீஸ் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

இதையொட்டி டெல்லி போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் ராகுல் மெஹ்ரா, நீதிபதிகளிடம் கூறும்போது, இந்த விவகாரத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளன. சம்பவத்தின்போது 21 போலீசார், 8 வக்கீல்கள் படுகாயம் அடைந்தனர். ஒரு உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மற்றொருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

வக்கீல்கள் தரப்பில் கூறும்போது, போலீஸ் தரப்பில் கூறியதைவிட கூடுதல் எண்ணிக்கையிலான வக்கீல்கள் காயம் அடைந்துள்ளனர்; போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் படுகாயம் அடைந்தனர் என கூறப்பட்டது.

இரு தரப்பு கருத்துக்களை கேட்ட நீதிபதிகள், இந்த மோதல் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இந்த விசாரணையை ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.பி. கார்க் நடத்துவார் என நீதிபதிகள் அறிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணை காலத்தில் சிறப்பு போலீஸ் கமிஷனர் சஞ்சய் சிங், கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ஹரிந்தர் சிங் ஆகியோரை இட மாற்றம் செய்யவும் டெல்லி போலீஸ் கமிஷனருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அத்துடன் இந்த விவகாரத்தில் மத்திய அரசு, டெல்லி போலீஸ் கமிஷனர், மாநில அரசு தலைமைச்செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

டெல்லி பார் கவுன்சிலுக்கும், டெல்லி மாவட்ட கோர்ட்டுகளின் வக்கீல் சங்கங்களுக்கும்கூட நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com