

சென்னை,
தபால் துறையில் அண்மையில் நடத்தப்பட்ட தேர்வில் உள்ள கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டன.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் இந்த நடைமுறையை கடுமையாக எதிர்த்தன. பாராளுமன்றத்திலும் இப்பிரச்சினை எதிரொலித்தது. இதையடுத்து, தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படும் என்று பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.
இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட தபால் துறை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என்று தபால் துறை அறிவித்துள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் அல்லது அம்மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் பதவி உயர்வுக்காக செப்டம்பர் 15-ல் இந்த தேர்வு நடைபெறுகிறது.