

பாட்னா
பீகாரின் பாங்கிபூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடுகிறார்.
பீகாரில் முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி தலைமையிலான பா.ஜ.க. அரசு நடந்து வருகிறது. அக்கட்சியின் தேசிய தலைவரான நிதின் நபீன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு எம்.பி.யான நிலையில், பாங்கிபூர் சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, பீகாரின் பாங்கிபூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இடைத்தேர்தலில், தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியான, ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் போட்டியிட முடிவு செய்து அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை செய்தியாளர் சந்திப்பின்போது வெளியிட்டார்.
அப்போது அவர், இந்த தேர்தல் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் மீதான மக்களின் தீர்ப்பு என்று குறிப்பிட்டார். 48 வயதான பிரசாந்த் கிஷோர், தேர்தல் களத்தில் வேட்பாளராக நேரடியாக களம் இறங்குவது இதுவே முதல்முறையாகும். இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 13-ந்தேதிவரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும். வருகிற 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, ஆகஸ்டு 3-ந்தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கான வலுவான தொகுதியாக உள்ளது. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சி மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் ஆதரவை கோருவீர்களா? என கிஷோரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், அவர்களிடம் மட்டும் என்ன? பா.ஜ.க.விடம் கூட எனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்பேன் என நகைச்சுவையாக கூறினார்.