

புதுடெல்லி,
இந்தியாவின் ஜனாதிபதி திரவுபதி முர்மு, வரும் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
மால்டோவா அதிபர் மாயா சாண்டு அழைப்பின் பேரில், ஜூலை 20-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு மால்டோவாவுக்கு செல்கிறார். இந்த பயணத்தின்போது, ஜனாதிபதி திரவுபதி முர்மு மால்டோவா அதிபரை சந்தித்து, தூதரக அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார். மேலும், மால்டோவா குடியரசின் நாடாளுமன்ற தலைவர் இகோர் குரோசுவையும் அவர் சந்திக்க உள்ளார்.
தொடர்ந்து மால்டோவா-இந்தியா நாடாளுமன்ற நட்புறவுக் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் திரவுபதி முர்மு, அங்கு நடைபெறும் வர்த்தக மன்றத்தில் பங்கேற்று உரையாற்றுவதோடு, அந்நாட்டில் வசிக்கும் இந்திய சமூகத்தினரை சந்தித்து பேச உள்ளார்.
இதைத் தொடர்ந்து, வடக்கு மாசிடோனியா அதிபர் கோர்டானா சில்ஜனோவ்ஸ்கா-டாவ்கோவா அழைப்பின் பேரில், ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வடக்கு மாசிடோனியாவுக்கு செல்கிறார். இந்திய ஜனாதிபதி ஒருவர் மால்டோவா மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த பயணத்தை முடித்துக் கொண்டு, அடுத்ததாக ருமேனியா அதிபர் நிகுசோர் டான் அழைப்பின் பேரில், ஜூலை 23 முதல் 25 வரை ஜனாதிபதி திரவுபதி முர்மு ருமேனியா சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஜனாதிபதி ஒருவர் முதல் முறையாக ரூமேனியா செல்ல உள்ளார்.
இந்த மூன்று நாடுகளுக்கான ஜனாதிபதி திரவுபதி முர்முவின் சுற்றுப்பயணம், அந்நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவத உதவும் என்றும், பரந்த கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்துடனான இந்தியாவின் உறவுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.