

அரசியல் சாசன நாள்
இந்திய அரசியல் சாசனம் 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள் அரசியல் சாசன நாளாக கொண்டாடப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் சுப்ரீம் கோர்ட்டில் அரசியல் சாசன தின கொண்டாட்டத்தின் நிறைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய பாரம்பரியம், நீதிபதிகளை நேர்மை மற்றும் பற்றற்ற தன்மையின் மாதிரியாக கொண்டிருக்கிறது.
நம்பிக்கை மற்றும் பழிக்கு அப்பாற்பட்ட நடத்தைகள் நிறைந்தவர்கள் நீதிபதிகள். அதற்கான வளமான வரலாறு நமக்கு உள்ளது. அவை எதிர்கால சந்ததிகளுக்கான அடையாளங்களாக மாறி இருக்கின்றன.
உயர்ந்த தரம்
அத்தகைய உயர்ந்த தரத்தினை இந்திய நீதித்துறை பின்பற்றி வருகிறது என்பதை குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நீங்கள் உங்களுக்காக உயர்ந்த பண்புகளை கொண்டிருக்கிறீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே கோர்ட்டு அறைகளில் பேசுகிறபோது, மிகுந்த விவேகத்துடன் செயல்படுவது முக்கியம். அது நீதிபதிகளின் கடமை ஆகும்.
கவனக்குறைவான வார்த்தைகள், நல்ல நோக்கத்துடன் கூறப்பட்டாலும் கூட, அவை நீதித்துறையை சந்தேகத்துக்கு உரிய விளக்கங்கள் இயக்குவதற்கு வழிவகுத்து விடும்.
நம்பகமான அமைப்பு
நீதிபதிகளின் இன்றியமையாத தரம், சுதந்திரத்தை அடிப்படையாக கொண்ட பற்றற்ற தன்மை ஆகும். கோர்ட்டுகள், அன்றைய உணர்வுகளில் சிக்கும்போது, நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. போட்டியிடும் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக அழுத்தங்களை தேர்ந்தெடுப்பதில் முதன்மைப் பொறுப்பை ஏற்கும் என்று வரலாறு கற்பிக்கிறது .
ஆரம்பத்தில் இருந்தே நீதித்துறை தனது பொறுப்பை நிறைவேற்றும் அதே வேளையில் அந்த உயர்ந்த நடத்தை தரங்களை தொடர்ந்து கடைப்பிடித்து மக்களின் பார்வையில் மிகவும் நம்பகமான அமைப்பாக பார்க்கப்படுகிறது.
சமூக ஊடக தகவல்களால் வேதனை
நீதிபதிகள் மீது சமூக ஊடகங்களில் வெளியாகிற தகவல்கள் முடிவில்லாமல் வேதனை அளிக்கிறது.
இந்த சமூக ஊடக தளங்கள், தகவல்களை ஜனநாயகப்படுத்த அற்புதமாக செயல்பட்டன. ஆனாலும் அவற்றுக்கும் இருண்ட பக்கம் என்ற ஒன்று உண்டு. இவற்றை சில விஷமிகள் தவறாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். இது ஒரு பிறழ்வு என்று நம்புகிறேன். இது குறுகிய காலத்துக்கே இருக்கும்.
இதன் பின்னணியை நாம் கூட்டாக ஆராய வேண்டும். இது ஆரோக்கியமான சமூகத்தின் நலனுக்காக இது அவசியம்.
ஜனநாயகம் வலுப்பெற...
அரசியல் அமைப்புதான் நமது கூட்டுபயணத்துக்கான திட்ட வரைபடம் போன்றது. அதன் மையம், நீதி, சுதந்திரம், சமத்துவம், மற்றும் சகோதரத்துவம் ஆகும்.
நீதி என்பது ஜனநாயகம் சுழலும் முக்கிய அமைப்பு ஆகும். நீதித்துறை, சட்டம் இயற்றும் மன்றம், நிர்வாகம் ஆகிய மூன்றும் இணக்கமாக இருந்தால் ஜனநாயகம் வலுப்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.