

லக்னோ,
தீபாவளி அன்று இரவில், பட்டாசு வெடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு துப்பாக்கி சூடாக மாறியதை தொடர்ந்து, ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர் படை வீரர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் கடானா கிராமத்தை சேர்ந்தவர் 26 வயதான சவுரப் தோமர். ராணுவ வீரரான இவர், புதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார்.
தீபாவளி கொண்டாட்டத்திற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். தீபாவளி தினமான கடந்த 8ம் தேதி இரவு சவுரப் தனது சகோதரர்கள் வினீத், மின்டுவுடன் வீட்டின் முன் பட்டாசு வெடித்தார்.
அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த தீரஜ், அவரது சகோதரர் மோனு ஆகியோருடன் சவுரப்புக்கு வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது. அப்போது, தீரஜ் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில், சவுரப்பின் தலையில் குண்டு பாய்ந்தது.
மீரட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்து குண்டு அகற்றப்பட்டது. எனினும் சவுரப் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவித்தனர். போலீசார் சவுரப்பின் தந்தை அளித்த புகாரின்படி தீரஜ் மற்றும் மோனு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.