

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பைரேன்சிங் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், ‘குகி’ பழங்குடியினர் நடத்திய பேரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர்களுக்கும், ‘மெய்தி’ இனத்தினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. கலவரத்தில் 260-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இரு இனங்களை சேர்ந்த ஆயுதக்குழுக்கள் இடையே அவ்வப்போது சண்டை நடந்து வருகிறது.இதற்கிடையே, வன்முறை நீடித்ததால், கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ந் தேதி, பைரேன்சிங் தலைமையிலான அரசு பதவி விலகியது. பிப்ரவரி 13-ந் தேதி, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
சட்டசபை முடக்கி வைக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு பிறகு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்பட்டது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீண்டும் அமைக்கும் நோக்கத்தில், மெய்தி, குகி இனங்களை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சிகள், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரிடம் பா.ஜனதா மேலிடம் கருத்து கேட்டது. கடந்த மாதம் 14-ந் தேதி, இருதரப்பு எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜனதா பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் கருத்து கேட்டார்.
டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமையகத்தில் மணிப்பூர் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதில், சட்டசபை பா.ஜனதா கட்சி தலைவராக (முதல்-மந்திரி) ஒய்.கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார். அவர் முன்னாள் மந்திரி ஆவார்.‘குகி’ பழங்குடி இனத்தை சேர்ந்த முன்னாள் பெண் மந்திரி நெம்சா கிப்ஜென், துணை முதல்-மந்திரியாக தேர்வாகி உள்ளார்.
இதையடுத்து, மணிப்பூரில் மீண்டும் ஆட்சி அமைக்க ஏதுவாக அங்கு அமலில் இருந்த ஜனாதிபதிஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது. மணிப்பூரில் புதிய அரசு வரும் 12-ந் தேதிக்குள், பதவியேற்கும் என்று தெரிகிறது.