

புது டெல்லி,
தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கான ஒரு முக்கிய சர்வதேச நுழைவாயிலாக கருதப்படும் புதிதாகக் கட்டப்பட்ட நொய்டா சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி (சனிக்கிழமை) திறந்து வைக்கிறார்.
டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு துணையாகச் செயல்படும் வகையில், டெல்லி-என்சிஆர் பிராந்தியத்திற்கான இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக நொய்டா விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா ஒரு உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக உருவெடுக்கும் பயணத்தில், இந்த திறப்பு விழா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது என்று மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி மார்ச்-28, அன்று உத்தரப் பிரதேசத்திற்கு வருகை தரவுள்ளார். காலை சுமார்- 11.30 மணியளவில், கவுதம புத்த நகர் மாவட்டத்திலுள்ள ஜேவார் பகுதியில் அமைந்துள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முனையக் கட்டிடத்தை அவர் பார்வையிடுவார். அதைத் தொடர்ந்து நண்பகல் சுமார்- 12 மணியளவில், பிரதமர் நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்டத்தை திறந்து வைத்து, அந்த நிகழ்வில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார்.
இந்தியாவிலேயே செயல்படுத்தப்படும் மிகப்பெரிய ‘கிரீன்பீல்ட்’ புதியதாக உருவாக்கப்படும் விமான நிலையத் திட்டங்களில் நொய்டா விமான நிலையமும் ஒன்றாகும். டெல்லி மற்றும் நொய்டா விமான நிலையங்கள் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த விமான போக்குவரத்து அமைப்பாகச் செயல்படும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும், பயணிகளைக் கையாளும் திறன் விரிவடையும், மேலும் டெல்லி-என்சிஆர் பிராந்தியம் உலகின் முன்னணி விமானப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாகத் திகழும்.
யமுனா விரைவுச்சாலையின் ஓரத்தில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள நொய்டா சர்வதேச விமான நிலையம், சாலை, ரெயில், மெட்ரோ மற்றும் பிராந்தியப் போக்குவரத்து அமைப்புகளுடன் தடையற்ற ஒருங்கிணைப்புடன் ஒரு பல்முனைப் போக்குவரத்து மையமாக திட்டமிடப்பட்டுள்ளது. இது பயணிகள் மற்றும் சரக்குகளுக்குத் திறமையான இணைப்பை உறுதி செய்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.