

புதுடெல்லி,
புதிய தேசிய கல்விக்கொள்கை அடிப்படையில் 9-ம் வகுப்புக்கு புதிய பாடப்புத்தகங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பல இடங்களில் இருந்து புகார் எழுந்துள்ளது. எனவே இது தொடர்பாக என்.சி.இ.ஆர்.டி. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 'புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான 9-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் போர்க்கால அடிப்படையில் அச்சிடப்பட்டு வருகின்றன. அத்துடன் நாடு முழுவதும் வினியோகிக்கப்பட்டும் வருகின்றன. மிக அதிக எண்ணிக்கையிலான பாடப்புத்தகங்கள் தேவைப்படுவதால், சில இடங்களில் அவற்றின் வினியோகத்துக்கும் தேவைக்கும் இடையே தற்காலிக இடைவெளி ஏற்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.
இந்த சூழலை என்.சி.இ.ஆர்.டி. உன்னிப்பாகக் கண்காணித்து, இந்த இடைவெளியைக் குறைக்கப் பணியாற்றி வருவதாகவும், பாடப்புத்தகங்களின் வினியோகம் சீரடைந்து வருவதாகவும் கூறியுள்ளது.