

புதுடெல்லி,
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டம் நடத்துவது தொடர்பாக செப்டம்பர் 30-ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க வருமாறு ஸ்டாலினுக்கு, மம்தா பானர்ஜி தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவில் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் கடந்த ஆண்டு தொடங்கியது. பல மாநிலங்களில் பணிகள் முடித்துவிட்டன. தற்போது மீதமுள்ள மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன.
இந்த திருத்தத்தின்போது பல லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள். படிவம் 6 மூலம் பல கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கான ஆதாரங்களும் கேட்கப்பட்டன. இதன் விளைவாக பல லட்சம் பேர் வாக்காளர் பட் டியலில் இருந்து நீக்கப்பட்டார்கள். அதுமட்டுமல்லாது புதிய வாக்காளர்களும் சேர முடியாத நிலை ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் படிவம் தொடர்பாக தேர்தல் ஆணையர்கள் எழுப்பிய கேள்விகளை புறந்தள்ளிவிட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது.
இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் இதை கையில் எடுத்துள்ளன.
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள்.
ஞானேஷ்குமார் மீது சுப்ரீம் கோர்ட்டில் தனி நபர் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். இப்போது 2,000 பேர் தலைமை நீதிபதிக்கு கடிதமும் எழுதி உள்ளார்கள்.
பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட சில கட்சிகளும், தேர்தல் ஆணையர் மக்களுக்கு விளக்க வேண்டும் என குரல் எழுப்பின. இதையடுத்து தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன் படி சிறப்புத் தீவிரத் திருந்த முறை எளிதாக்கப்பட்டது.
விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இருந்தாலும் எதிர்க்கட்சிகள் விடவில்லை. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளது. இந்த போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளன. அதன்படி செப்டம்பர் 30-ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணிக் கட்சித்தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளார்கள்.
இதில் சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே. சி.பி.எம் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, மம்தாவின் மருமகள் அபிஷேக் பாளர்ஜி, சிவசேனைத்தலைவர் உத்தவ் தாக்கரே போன்ற தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.