டெல்லி தடையை மீறிய போராட்டம்; அபிஜீத் திப்கே உள்பட 3 பேர் விடுவிப்பு

டெல்லியில் தடையை மீறிய போராட்டம் தொடர்பாக தடுப்பு காவலில் வைக்கப்பட்ட யூ-டியூபர் துருவ் ரதீ நேற்றிரவு விடுவிக்கப்பட்டார்.

டெல்லி தடையை மீறிய போராட்டம்; அபிஜீத் திப்கே உள்பட 3 பேர் விடுவிப்பு
Published on: 

புதுடெல்லி

டெல்லியில் தடையை மீறிய போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அபிஜீத் திப்கே உள்பட 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. ஏறக்குறைய 13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ள சூழலில், உரிய முறைகளின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

பதவி விலக வலியுறுத்தல்

எனினும், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார், மற்ற இரு ஆணையாளர்களின் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாமல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த நீக்கத்திற்கு அவரது அரசு சார்பு நடவடிக்கைகளே காரணம் எனக்கூறி எதிர்க்கட்சியினர், அவரை பதவி விலக வலியுறுத்தி வருகிறார்கள். தவிர, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று ஆம் ஆத்மி கட்சியும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதேபோன்று சமீபத்தில், மராட்டியத்தின் மும்பை சிவாஜி பார்க்கில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, 3-ந்தேதி அகில இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடத்தியது.

டெல்லியில் போராட்டம்

இந்த நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். எனினும், போலீசார் இதற்கு அனுமதி மறுத்திருந்தனர். போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட சூழலில், தடையை மீற வேண்டாம் என போலீசார் எச்சரித்தனர். வன்முறை எதுவும் பரவாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.), டெல்லி காவல் துறையினர் என ஏறக்குறைய 25 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

விமானத்தில் கைது

இந்த நிலையில், தடையை மீறி போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோஷங்களையும் எழுப்பினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதேபோன்று, மும்பையில் இருந்து டெல்லிக்கு வந்த அபிஜீத் திப்கேவை விமானத்தில் வைத்தே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இந்த சூழலில் அபிஜீத் திப்கே, அசுதோஷ் ரன்கா மற்றும் சவுரவ் தாஸ் ஆகியோர் மாஜிஸ்திரேட் விசாரணைக்காக இன்று கொண்டு செல்லப்பட்டனர்.

3 பேர் விடுவிப்பு

ஏறக்குறைய 24 மணிநேரம் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டு, பிடித்து வைக்கப்பட்டிருந்த அவர்கள் டெல்லி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் வருகைக்காக காந்திருந்தனர்.

அவர் வந்ததும், தங்களை விடுவிக்க வேண்டும் என அவர்களுடைய கட்சியினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அவர் ஏற்று கொண்டு, அவர்கள் 3 பேரையும் இன்று விடுவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேபோன்று தடுப்பு காவலில் வைக்கப்பட்ட யூ-டியூபர் துருவ் ரதீ நேற்றிரவு விடுவிக்கப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com