

பாகூர்,
புதுவை பாகூர் மூலநாதர் கோவில் தேரோட்டத்தை கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
புதுவை பாகூரில் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் கோயில் உள்ளது. மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.
இத்தகைய பழமையான கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை பல்லக்கில் சந்திரசேகரர் புறப்பாடும், இரவு யானை, மயில், ரிஷபம், நந்தி, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதியுலாவும் நடந்தது. 26-ம் தேதி மூலநாதர்-வேதாம்பிகை அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முதல்- அமைச்சர் ரங்கசாமி, பாகூர் தொகுதி எம்எல்ஏ செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் தியாகராஜன், தாசில்தார் ராஜலட்சுமி, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பாகூர் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தேர் இழுத்து வழிபட்டனர். தேரோட்டத்தின்போது காய், பழம், பூ, மிட்டாய் போன்ற பொருட்களை தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.