

புதுச்சேரி,
புதுச்சேரி சுனாமி குடியிருப்புப் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளன. இதனால் அங்கு சுற்றித் திரியும் தெரு நாய்கள் கூட்டமாக, பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்களை துரத்திச் செல்கின்றன.
புதுச்சேரி மாநிலம் சின்னக்காலாப்பட்டு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள தெருக்களில் கடந்த சில வாரங்களாகத் தெரு நாய்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது. அவை கூட்டமாக சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் சாலையில் நடமாடவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மற்றும் சிறு குழந்தைகளைத் தெரு நாய்கள் கூட்டமாகத் துரத்திய சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. நாய்களுக்குப் பயந்து குழந்தைகள் அலறியடித்து ஓடும் இந்த பதற வைக்கும் காட்சிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், முதியவர்கள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்லும் மீனவர்கள் என அனைவரையும் இந்த நாய்கள் துரத்தி அச்சுறுத்துவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் நிகழும் முன், உழவர்கரை நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, சுற்றித் திரியும் தெரு நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்தவும், கருத்தடை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.