

புனே,
தெய்வீக சக்தி இருப்பதாகக் கூறி நம்பவைத்து பெண்ணை பலாத்காரம் செய்து, சிறுநீர் குடிக்க வைத்த கொடூர போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
மராட்டிய மாநிலம், புனே கராடி பகுதியில் 'நவீன குருகுலம்' என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் போலி சாமியார் ராதாமோகன் மிஸ்ரா. இவரிடம் ஒரு குடும்பத்தினர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களாக இருந்து வந்துள்ளனர். தனக்கு அதீத தெய்வீக சக்தி இருப்பதாகவும், மனிதர்களின் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ளும் ஆற்றல் இருப்பதாகவும் கூறி ராதாமோகன் மிஸ்ரா அந்த குடும்பத்தினரை நம்பவைத்துள்ளார்.
பக்தர்கள் தங்களது தினசரி எண்ணங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவரங்களை அறிக்கையாக எழுதி தரவேண்டும் என்று கூறி, அதை வைத்தே அவர்களை மூளைச்சலவை செய்து தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
இதனை பயன்படுத்தி அந்த குடும்பத்தை சேர்ந்த பெண்ணை அவர்களிடம் இருந்து மெல்ல மெல்ல பிரித்து தனிமைப்படுத்தியுள்ளார். பின்னர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப்பெண்ணை தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்தும், கொடூரமாக சித்ரவதை செய்தும் வந்துள்ளார். சாமியாரின் உத்தரவுக்கு கீழ்ப்படிய மறுத்தபோது, அந்த பெண்ணுக்கு மின்சார ஷாக் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சாமியாரின் சிறுநீரை கட்டாயப்படுத்தி அந்த பெண்ணை குடிக்க வைத்துள்ளனர்.
இந்த சித்ரவதைகளுக்கு சாமியாரின் ஆசிரமத்தில் இருந்த 6 பெண்கள் உள்ளிட்ட 7 கூட்டாளிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். அத்துடன், அந்த பெண்ணின் சொத்துகளையும் ஏமாற்றி தனது பெயருக்கு போலி சாமியார் மாற்ற முயன்றுள்ளார்.
இந்த கொடூரம் தாங்கமுடியாத பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சூனிய எதிர்ப்பு மற்றும் மனித பலி தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஆசிரமத்திற்குள் புகுந்து போலி சாமியார் ராதாமோகன் மிஸ்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட 8 பேரையும் கைது செய்தனர்.
இதனையடுத்து அங்கு நடத்திய சோதனையில் 8 லேப்-டாப்க்கள், 19 ஹார்டு டிஸ்க்குகள், 23 பென்டிரைவ்கள் மற்றும் ரூ.6.5 லட்சம் ரொக்கம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தற்போது அந்த ஆசிரமத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.