மும்பை; சரத் பவார் வீட்டை கற்களால் தாக்கிய போக்குவரத்து தொழிலாளர்கள், பத்திரிகையாளர் உட்பட 115 பேர் கைது!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டை தாக்கியதாக செய்தியாளர் ஒருவர் புனேயில் இன்று கைது செய்யப்பட்டார்.
மும்பை; சரத் பவார் வீட்டை கற்களால் தாக்கிய போக்குவரத்து தொழிலாளர்கள், பத்திரிகையாளர் உட்பட 115 பேர் கைது!
Published on

மும்பை,

மராட்டிய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் ( எம்.எஸ்.ஆர்.டி.சி ) ஊழியர்கள், மும்பை மாநகராட்சியை மாநில அரசுடன் இணைக்கக் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 5 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் மாநில அரசு கோர்ட்டு உத்தரவை சுட்டிக்காட்டி அதனை நிராகரித்து விட்டது.

இந்த நிலையில், வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்களுக்கு எதிராக போக்குவரத்துக் கழக நிர்வாகம் தாக்கல் செய்த அவமதிப்பு மனுவை மும்பை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கைவிடுமாறும், ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

மேலும், ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று கோர்ட்டு கூறியுள்ளது. எம்.எஸ்.ஆர்.டி.சி ஊழியர்கள் பணியைத் தொடர ஏப்ரல் 22ஆம் தேதி வரை அவகாசம் அளிக்க வேண்டும் என மும்பை ஐகோர்ட் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த தீர்ப்பு வெளியான நிலையில், அடுத்த நாளிலிருந்து பல ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர். அதேசமயம், சிலர் போரட்டத்தை தொடர்ந்தனர்.

அவர்கள் மும்பையில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் வீட்டை முற்றுகையிட்டு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி போராட்டம் நடத்தினர். ஊழியர்கள் பவாரின் மும்பை இல்லமான சில்வர் ஓக் மீது கற்கள் மற்றும் காலணிகளால் தாக்கினர்.

மராட்டிய மாநிலத்தில், ஆளும் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அரசாங்கத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சி வசம் தான் மாநில உள்துறை அமைச்சகம் உள்ளது. அக்கட்சியின் தலைவர் சரத் பவார் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்காததை கண்டித்து போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் அவர் வீட்டை தாக்கியுள்ளனர். அதில் நல்ல வேளையாக வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, மும்பை போலீசார் 115 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 115 பேரில் 109 பேர் 109 பேர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை கைது செய்யப்பட்ட 109 பேரில் பெரும்பாலானோர் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆவர்.

இந்த நிலையில், சரத் பவாரின் வீட்டை தாக்கியதாக செய்தியாளர் ஒருவர் புனேயில் இன்று கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், மாநில அரசு பவாரின் மகள் சுப்ரியா சுலேவின் பாதுகாப்பை எக்ஸ் பிரிவில் இருந்து ஒய் ஆக உயர்த்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட சாலை பணியாளர்களை பணி நீக்கம் செய்வது குறித்தும் மாநில அரசு ஆலோசித்து வருகிறது.

மேலும், ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று எம்.எஸ்.ஆர்.டி.சி நிர்வாக இயக்குனர் சேகர் சன்னே தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com