

ஜோத்பூர்,
அரியவகை மான்களை வேட்டையாடியது தொடர்பான வழக்கில் இந்தி நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஜோத்பூரில் உள்ள மத்திய சிறையில் சல்மான்கான் அடைக்கப்பட்டுள்ளார். சல்மான் கான் தரப்பில் ஜோத்பூரில் உள்ள மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, ஜோத்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது சல்மான் கான் தரப்பில் வழக்கறிஞர் மகேஷ் போரா ஆஜராகி, விசாரணையில் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன; மான் வேட்டையாடப்பட்டது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்குகள் எதிலும் சல்மான் கான் துப்பாக்கியை ஏந்தி வேட்டையாடியது நிரூபிக்கப்படவில்லை. அரசு தரப்பில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருப்போர் நம்பிக்கைக்கு உகந்தவர்கள் அல்ல என்றார்.
இதைக் கேட்ட நீதிபதி ரவீந்திர குமார் ஜோஷி, வழக்குத் தொடர்பாக விசாரணை நீதிமன்றத்திடம் இருக்கும் கோப்பு விவரங்களை தாக்கல் செய்ய கோரினார். இதைத் தொடர்ந்து, சல்மான் கான் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருக்கும் மனு மீது சனிக்கிழமை (இன்று) முடிவு செய்யப்படும் என்று நீதிபதி ஜோஷி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு ராஜஸ்தான் நீதிமன்றம் 87 நீதிபதிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதிகளில் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதித்த நீதிபதி தேவ்குமார் கத்ரி மற்றும் ஜாமீன் மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ரவீந்திர குமார் ஜோஷி ஆகியோரும் அடங்குவர்.
தற்போது, நீதிபதி சந்திரகுமார் சோனக்ரா ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், நீதிபதி சந்திரகுமார் சோனக்பூரா இன்று தனது பொறுப்பை ஏற்றுக்கொள்வாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், நீதிபதி சோனக்ரா இன்று பொறுப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால், ஜாமீன் மனு மீது இன்று முடிவு செய்யப்படாது.
இதனால், மேலும் சில நாட்கள் சல்மான்கான் சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சட்டநிபுணர்கள் கூறுகின்றனர். இருந்தாலும், நீதிபதி இல்லாத காரணத்தால், வேறு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் சட்ட நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.