வினாத்தாள் முறைகேடு சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து முடங்கியது.
வினாத்தாள் முறைகேடு சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நாள் முதல் நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டுள்ளன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து முடங்கியது.

இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் 'பொதுத் தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026 என்ற வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நீட் போன்ற வினாத்தாள் கசிவை தடுக்க, பொதுத் தேர்வுகள் (முறையற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம்-2024 திருத்த மசோதா மக்களவையில் நாளை (27.07.2026) தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, மக்களவை உறுப்பினர்களுக்கு அந்த மசோதா நகல் விநியோகிக்கப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது:-

வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரையும் சிறைத் தண்டனை வழங்கப்படும். அதனுடன், ரூ. 50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். இதில், திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்.

வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணையை விரைந்து மேற்கொள்ள வசதியாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். இந்த விரைவு நீதிமன்றங்களில் வழக்கு மீது உடனடியாக விசாரணை தொடங்கி தினசரி அடிப்படையில் மேற்கொள்வதோடு, குற்றபத்திரிகை தாக்கல் செய்த 3 மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடு குற்றங்களை விரைந்து விசாரிப்பதற்காக, எந்தவொரு அமர்வு நீதிமன்றத்தையும் சிறப்பு விரைவு நீதிமன்றமாக மாற்றியமைக்கவும் அனைத்து மாநில அரசுகளுக்கு இந்த சட்டத் திருத்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com