'சரியான திட்டமிடல், கொலை செய்த பின் கொண்டாட்டம்' - அமராவதி மருந்துக்கடைக்காரர் கொலையில் பகீர் தகவல்

பொதுஇடத்தில் மகனின் கண்முன்னே தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார். தப்லிக் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்களே இந்த கொடூர கொலை செய்துள்ளனர்.
'சரியான திட்டமிடல், கொலை செய்த பின் கொண்டாட்டம்' - அமராவதி மருந்துக்கடைக்காரர் கொலையில் பகீர் தகவல்
Published on

மும்பை,

ஞானவாபி மதவழிபாட்டு தலம் தொடர்பாக கடந்த மே மாதம் ஆங்கில தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற நபர் இந்து மத கடவுள் சிவலிங்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித்தொடர்பாளரான நுபுர் சர்மா இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள், வன்முறை, கொலை சம்பவங்களும் அரங்கேறியது. இந்த விவகாரம் பூதாகாரமானதையடுத்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பாஜக சஸ்பெண்ட் செய்தது.

அதேவேளை, நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்கள் சிலர் கொலை செய்யப்பட்டனர். தாக்குதலுக்கும் உள்ளாகினர்.

அதிலும், மராட்டிய மாநிலம் அமராவதியை சேர்ந்த மருந்து கடைக்காரர் உமேஷ் கோல்கே (வயது 54) கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

உமேஷ் கோல்கே கடந்த ஜூன் 21-ம் தேதி இரவு தனது கடையை மூடிவிட்டு வீடு திரும்பியபோது அவரை பின் தொடர்ந்து வந்த கும்பல் உமேஷை கழுத்தற்றுத்து கொடூரமாக கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக, முபஷீர் அகமது, ஷாரூக் கான், அப்துல் தவ்ஷப் ஷேக், முகமது ஷோயப், அதிப் ரஷீத், யூசப் கான், இர்பான் கான், அப்துல் அப்பாஸ், முஸ்பிக்யூ அகமது, ஷேக் ஷகீல், ஷஹிம் அகமது ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

உமேஷ் கோல்கே கொலை முதலில் திருட்டு தொடர்பான கொலை என்று கருத்தப்பட்டு அந்த கோணத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்த கொலையை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடைக்காரர் கன்னையா லால் என்பவர் பட்டப்பகலில் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கன்னையா லாலை கொலை செய்வதை வீடியோவாக எடுத்து அதை கொலையாளிகள் சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். இது நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது.

கன்னையா லால் கொடூர கொலை போன்றே உமேஷ் கோல்கெ கொலையும் இருந்ததால் இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொண்டது.

விசாரணை தொடர்பான குற்றப்பத்திரிக்கையை கோர்ட்டில் என்.ஐ.ஏ. முகமை தாக்கல் செய்துள்ளது. அந்த குற்றப்பத்திரிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான முழு விவரம் பின்வருமாறு:-

இஸ்லாமிய மதக்கடவுளின் இறைதூதர் அவமதிக்கப்பட்டதற்கு பழிதீர்க்கவே தப்லிகி ஜமாத் அமைப்பை சேர்ந்த தீவிர இஸ்லாமியவாதிகளாலேயே (radicalised Islamists) அமராவதி மருந்துக்கடைக்காரர் உமேஷ் கோல்கே கொல்லப்பட்டுள்ளார்.

இந்த கொலை பொது அமைதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைத்தது. இந்த கொலை அமராவதி மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பொதுமக்களின் பாதுகாப்பை சீர்குலைத்தது.

இந்த கொலை பல்வேறு இடங்களில் கலவரங்களை ஏற்படுத்தியது. மக்களை பயமுறுத்தி அவர்களை வேலையை விட்டு வெளியேற்றியது. பலர் தலைமறைவாகினர். பலர் தங்கள் உயிர் மற்றும் பாதுகாப்பிற்கு அஞ்சினர். இது போன்ற பயங்கரவாத செயல் இந்தியாவின் ஒருமைப்பாட்டை கேள்விக்குறியாக்கியது.

தீவிரமயமாக்கப்பட்ட கும்பலால் நடத்தப்பட்ட பயங்கரவாத செயல் இது. உமேஷ் கோல்கே மத உணர்வை புண்படுத்திவிட்டதாக கூறப்படும் நிலையில் அவரை கொலை செய்து ஒரு உதாரணமாக காட்ட அந்த கும்பல் விரும்பு அந்த கொலையை செய்துள்ளது.

சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்கு பாதகமான மத உணர்வை புண்படுத்தியதாகவும், பகைமையை உருவாக்கவும், கெட்ட எண்ணத்துடனும், பல்வேறு சாதிகள் மற்றும் மதத்தினரிடையே, குறிப்பாக இந்தியாவில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தவும் தப்லிகி ஜமாத் அமைப்பை சேர்ந்த தீவிர இஸ்லாமியவாதிகளால் உமேஷ் கோல்கே கொலை செய்யப்பட்டுள்ளார்.

உமேஷ் கோல்கேவிற்கும் குற்றவாளிகளுக்கும் எந்த வித சொத்து தகராறு அல்லது மோதலில் ஈடுபட்டதற்கான வரலாறு இல்லை.

பாஜக தலைவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக வாட்ஸ்-அப்பில் போஸ்ட் பதிவிட்ட உமேஷ் கோல்கேவை பழிதீர்க்க குற்றவாளிகள் மிகவும் மதரீதியாக தீவிரமயமாக்கப்பட்ட பயங்கரவாத குழுவை அமைத்துள்ளார்.

இந்த பயங்கரவாத குழு 'இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதரை அவமதிப்பவர்களுக்கு தலைதுண்டிப்பு ஒரே தண்டனை' என்ற மிருகத்தனமான சித்தாந்தத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

உமேஷ் கோல்கே சட்டத்தை மதிக்கும் குடிமகனாக எந்த நபருடனும் பிரச்சினை கொண்டிருக்கவில்லை. குறிப்பாக, குற்றவாளிகளுடன் பிரச்சினை கொண்டிருக்கவில்லை.

சுதந்திர நாட்டில் அவர் தனக்கு உள்ள பேச்சுரிமையை பயன்படுத்தியுள்ளார். சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறப்படும் நுபர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அவரது மரண தண்டனை ஒரு சாதாரண கொலை அல்ல. மதநிந்தனை செய்ததாக அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று நிகழ்த்தப்பட்டது.

பொதுஇடத்தில் மகனின் கண்முன்னே தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார். சரியான திட்டமிடல், கொலை செய்த பின் கொண்டாட்டம் சமூகத்தில் ஒரு பெரிய பிரிவினரை அச்சுறுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டது பயங்கரவாத செயல்.

உமேஷ் கோல்கே கொலையில் முக்கிய குற்றவாளி இர்பான் கான். உமேஷ் கோல்கே கொலை செய்யப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்பு இர்பான் கான், மற்றொரு குற்றவாளி முஷ்பிகுர் அகமது மற்றும் மத அமைப்பை அமைபபி சேர்ந்த குழுவினர் இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறாக பேசியதாக கூடப்படும் நுபுர் சர்மாவுக்கு எதிராக புகார் கொடுக்க போலீஸ் நிலையம் சென்றுள்ளனர்.

ஆனால், பல மாநிலங்களில் நுபுர் சர்மாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்துவிட்டனர்.

போலீசார் நடவடிக்கை திருப்தி அளிக்காததால் தாங்களாகவே பழிதீர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் குற்றவாளிகள் இருந்துள்ளனர்.

நுபுர் சர்மாவுக்கு எதிராக போலீசில் புகார் கொடுக்க வேண்டும் என்று குற்றவாளி இர்பான் கான், மற்றொரு குற்றவாளி முஷ்பிகுர் அகமது இஸ்லாமிய மத உறுப்பினர்களுடன் சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த சிறப்பு கூட்டத்தில் எஞ்சிய குற்றவாளிகளும் பங்கேற்றுள்ளனர்.

ஆனால், போலீசார் மீண்டும் தலையிட்டு நுபுர் சர்மா மீது ஏற்கனவே பல இடங்களில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதனால், அந்த சிறப்பு கூட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த முடிவில் குற்றவாளிகள் திருப்தியாக இல்லை.

உமேஷ் கோல்கே கொலை செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு குற்றவாளிகள் அமராவதியில் உள்ள கவ்சியா மகாலில் கூடியுள்ளனர். அங்கு 'இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதரை அவமதிப்பவர்களுக்கு ஒரே தண்டனை தலைதுண்டிப்பு' என்று முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, உமேஷ் கோல்கேவை தலைதுண்டித்து கொலை செய்ய குற்றவாளிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் இறைதூதரை அமவதித்ததாக கூறப்பட்டதற்கு பழி தீர்க்க வேண்டும் என்ற பொதுவான நோக்கத்தோடு இர்பான் கான் தலைமையில் பயங்கரவாத குழு அமைக்கப்பட்டுள்ளது.

நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த உமேஷ் கோல்கேவை தவிர அமராவதியில் மேலும் 3 பேர் மத ரீதியில் தீவிரமயமாக்கப்பட்ட நபர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அந்த நபர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் 27 ரவுண்டு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது' என்று என்.ஐ.ஏ. கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com