

புதுடெல்லி,
ரபேல் போர்விமான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக பிரான்சின் டசால்ட் நிறுவனம் இடைத்தரகர் ஒருவருக்கு சுமார் ரூ.9 கோடி கமிஷன் கொடுத்ததாக பிரான்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு இருந்தது.
இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்த வக்கீல் எம்.எல்.சர்மா, மீண்டும் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று நடைபெற்றது. அப்போது வக்கீல் சர்மா, ரபேல் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிட்டார்.
அதைப் பரிசீலித்த நீதிபதிகள், ரபேல் ஒப்பந்த முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனு மீதான விசாரணை 2 வாரங்கள் கழித்து நடைபெறும் என தெரிவித்தனர்.