இந்தியாவை பற்றி அறியாத ராகுல் காந்தியால் சங்கத்தினை புரிந்து கொள்ள முடியாது; ஆர்.எஸ்.எஸ். அமைப்பு

இந்தியாவை பற்றி அறியாத ராகுல் காந்தியால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை புரிந்து கொள்ள முடியாது என அந்த அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவை பற்றி அறியாத ராகுல் காந்தியால் சங்கத்தினை புரிந்து கொள்ள முடியாது; ஆர்.எஸ்.எஸ். அமைப்பு
Published on

புதுடெல்லி,

இங்கிலாந்து நாட்டில் சுற்று பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லண்டன் நகரில் பேசும்பொழுது, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஆகியவை நமது சொந்த மக்களையே பிரிக்கும் செயலில் ஈடுபடுகிறது. நம்முடைய நாட்டில் அவர்கள் வெறுப்புணர்வை பரப்பி வருகின்றனர்.

இந்தியாவின் இயற்கை தன்மையை மாற்றவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முயற்சிக்கிறது.

நமது பணி மக்களை ஒன்றிணைத்து நாட்டை முன்னோக்கி அழைத்து செல்ல வேண்டும் என்பது ஆகும். அதனை எப்படி மேற்கொள்ள வேண்டும் என நாம் செய்து காட்டியுள்ளோம் என்று கூறினார்.

அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை, அரபு நாடுகளில் காணப்படும் முஸ்லிம் பிரதர்ஹுட் எனும் முஸ்லிம் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு செயல்படும் அரசியல் அமைப்புடன் ஒப்பிட்டு பேசினார்.

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரசார பிரமுகரான அருண் குமார் என்பவரிடம் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், முஸ்லிம் பிரதர்ஹூட் என்பது பற்றி அறியாதவராக ராகுல் இருக்கிறார்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் அச்சுறுத்தலை உலகம் முழுவதும் இன்று எதிர்கொண்டு உள்ளது. அவர் இதனை அறியவில்லை. சூழ்நிலையின் தீவிரத்தினை அவர் புரிந்து கொள்ளவில்லை. அதனால் இதுபோன்று அவர் பேசுகிறார் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் என ராகுல் காந்தி முன்பு கூறியதனை குறிப்பிட்டு, இந்தியாவை புரிந்து கொள்ளாத ஒருவரால் சங்கத்தினை புரிந்து கொள்ள முடியாது என கூறினார்.

ராகுல் காந்தி, இந்தியாவை பற்றி அறியாதவராக இருக்கிறார். உலகம் ஒரு குடும்பம் என்ற பொருள் தரும் வாசுதைவ குடும்பகம் என்ற இந்திய கலாசாரத்தின் அடிப்படை கூறுகள் பற்றி அவர் அறியாதவராக உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com