

ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேர் மாவட்டத்தில் 21 வயது இளம்பெண் ஒருவர் மாவட்ட ஊராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி தேர்தலில் (ஜில்லா பரிஷத்) ஜெய்சல்மேர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 21 இடங்களில் காங்கிரஸ் கட்சி 20 இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க. ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் 12-வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சந்தோஷ் குமாரி (21 வயது), பா.ஜ.க. வேட்பாளர் லட்சுமியை 6,137 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மாவட்ட ஊராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, காங்கிரஸ் சார்பில் 21 வயதான சந்தோஷ் குமாரி மாவட்ட ஊராட்சி தலைவராக (ஜில்லா பிரமுக்) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடினர். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமாரி, 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து, ஜெய்சல்மேர் மக்களுக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கும் சந்தோஷ் குமாரி நன்றி தெரிவித்தார். மாவட்ட வளர்ச்சிக்காக அனைத்து மக்கள் பிரதிநிதிகளுடனும் இணைந்து பணியாற்றுவதே தனது முதல் நோக்கம் என்றும், மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற முயற்சி செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்களின் கல்வியை ஊக்குவிப்பதிலும், அவர்கள் சுயசார்புடன் வாழ்வதற்கு உதவுவதிலும் தனி கவனம் செலுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.