20 ஆண்டு கால மோதல் முடிவுக்கு வந்தது: ஒரே மேடையில் தோன்றிய உத்தவ் - ராஜ்தாக்கரே


20 ஆண்டு கால மோதல் முடிவுக்கு வந்தது: ஒரே மேடையில் தோன்றிய  உத்தவ் - ராஜ்தாக்கரே
x
தினத்தந்தி 5 July 2025 3:08 PM IST (Updated: 5 July 2025 7:16 PM IST)
t-max-icont-min-icon

மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இரு தலைவர்களும் பங்கேற்றனர்.

மும்பை,

சிவசேனா கட்சியில் மிகவும் செல்வாக்காக இருந்தவர் ராஜ் தாக்கரே. இவர் பால் தாக்கரேவின் சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன் ஆவார். கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனா கட்சியில் பால் தாக்கரேவுக்கு அடுத்த வாரிசு யார் என்பதில் ஏற்பட்ட மோதலால் ராஜ் தாக்கரே கட்சியை விட்டு வெளியேறினார். இதையடுத்து, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார் ராஜ் தாக்கரே. அப்போது முதல் ராஜ் தாக்கரே - உத்தவ் தாக்கரே எலியும் பூனையுமாக இருந்து வருகின்றனர். இரு தரப்பினரிடையே 20 ஆண்டுகளாக அரசியல் ரீதியாக மோதல் நீடித்து வந்தது.

இந்தச் சூழலில் மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையின்படி, மராட்டியத்தில் 1-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியைக் கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் முடிவை திரும்ப பெற்றது. இது தொடர்பான வெற்றி பேரணி . மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில்தான், ஒரே மேடையில் இருவரும் பங்கேற்றனர்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து இருவரும் ஒரே மேடையில் தோன்றினர். இரு சகோதரர்களும் இணைந்து நடத்திய முதல் பொதுக்கூட்டத்தில் ராஜ் தாக்கரே பேசியதாவது: "சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவால் செய்ய முடியாத ஒன்றை, தேவேந்திர பட்னவிஸ் செய்து விட்டார். என்னையும், சகோதரர் உத்தவ் தாக்கரேவையும் இணைத்து விட்டார். மராட்டியத்தில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்," என்றார்.

உத்தவ் தாக்கரே பேசுகையில், "ராஜ் தாக்கரேவும் நானும் ஒன்றுபட்டுள்ளோம். ஒன்றாக ஆட்சிக்கு வருவோம். நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறோம். இந்த மேடை எங்கள் உரைகளை விட முக்கியமானது. ராஜ் தாக்கரே ஏற்கனவே மிகச் சிறந்த உரையை நிகழ்த்தியுள்ளார். இப்போது நான் பேச வேண்டிய அவசியமில்லை," என்றார்.

மொழி சர்ச்சை

மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பாஜக - சிவ சேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு, சமீபத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. 3-வது மொழியாக இந்தி மொழி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா கட்சியும், ராஜ் தாக்கரே தலைமையிலான நவ நிர்மான் சேனாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசாங்கம் எங்கள் மீது இந்தியை திணிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் கூறினர். இதற்கு பெரும் ஆதரவு திரண்டதை அடுத்து, மாநில அரசு தனது அறிவிப்பை திரும்பப் பெற்றது.

மாநில அரசின் இந்த முடிவை அடுத்து, அதற்கான வெற்றி விழா மும்பையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் ஒன்றாக இணைந்து மேடையில் தோன்றினர். அப்போது, அரங்கத்தில் இருந்த இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் உற்சாக மிகுதியில் கோஷங்களை எழுப்பினர்.

1 More update

Next Story