எதிக்கட்சிகள் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது.
டெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதுமுதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால், கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.
அதேவேளை, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் விவகாரங்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோர் மக்களவையில் உரையாற்றினர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடியது. இதில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றி வருகிறார். ஆனால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்து விவாதிக்கக்கோரி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஸ் நிராகரித்தார். இதனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.
அமளியை தொடர்ந்து மாநிலங்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவை துணைத்தலைவர் அறிவித்தார்.






