

தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் காலியாக உள்ள 27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது. இதில் 24 இடங்கள் வழக்கமான தேர்தல் மூலமாகவும், 3 இடங்கள் இடைத்தேர்தல் மூலமாகவும் நிரப்பப்பட உள்ளன. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் தலா 4 இடங்களும், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தலா 3 இடங்களும், ஜார்கண்டில் 2 இடங்களும் காலியாகின்றன. மேலும் மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடம் நிரப்பப்பட உள்ளது.
தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கடந்த மே 7-ம் தேதி ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் 2028-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி வரை இருந்த நிலையில், முன்கூட்டியே ராஜினாமா செய்ததால் அந்த இடத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்று ஆகும். தமிழகத்தில் இதுவரை பிரவீன் சக்கரவர்த்தி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆளும் கூட்டணி சார்பில் அவர் மட்டுமே களமிறங்கியுள்ளதால், போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் ஜூன் 9-ம் தேதி பரிசீலனை செய்யப்பட உள்ளன. வேட்புமனுவை திரும்பப் பெற ஜூன் 11-ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியிருந்தால் 18-ம் தேதி காலை 9 மணி முதல்மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.