

புதுடெல்லி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங், 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்து வருகின்றனர்.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மக்களவையில் இன்று விளக்கம் அளித்தார். அதற்கு முன்பாக, நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகளின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.