

பெங்களூரு,
பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட கல்லூரி மாணவி அமுல்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டேயில் நேற்று ஸ்ரீராமசேனை அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது அமுல்யாவின் புகைப்படத்தை செருப்பால் அடித்தும், தீவைத்து எரித்தும் போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இதில் அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் சஞ்ஜீவ் மரடி பேசியதாவது:-
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட அமுல்யாவை தேசத்துரோக வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தேசத்துரோக செயலில் ஈடுபட்டவர் நம் நாட்டில் வசிக்க அனுமதிக்கக்கூடாது. சிறையில் இருந்து அவர் ஜாமீனில் வெளியே வந்தால் என்கவுண்ட்டர் செய்ய நான் யோசிக்க மாட்டேன். அதுபோல, அமுல்யாவை கொல்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கவும் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். சஞ்ஜீவ் மரடியின் இந்த பேச்சு பெரும்சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.