பலாத்காரம்; நாகர்கோவில் எக்ஸ்பிரசில் தப்ப முயற்சி... சினிமா பாணியில் போலீசார் சேசிங்..!!

மும்பையில் 14 வயது சிறுமி பலாத்கார சம்பவத்தில் நாகர்கோவில் எக்ஸ்பிரசில் தப்ப முயன்ற நபரை சினிமா பாணியில் போலீசார் சேசிங் செய்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பலாத்காரம்; நாகர்கோவில் எக்ஸ்பிரசில் தப்ப முயற்சி... சினிமா பாணியில் போலீசார் சேசிங்..!!
Published on

மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் ரியே சாலையில் பெற்றோருடன் 14 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில், திடீரென சிறுமியின் வீட்டுக்குள் 25 வயது வாலிபர் ஒருவர் புகுந்துள்ளார்.

வீட்டில் சிறுமி தனியாக இருப்பது பற்றி அறிந்த அந்த நபர் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். இதுபற்றி சிறுமி போலீசில் கூறிய தகவலில், அத்துமீறி நுழைந்த அந்த வாலிபர், சிறுமி அணிந்திருந்த ஆடைகளை கிழித்து உள்ளார்.

அதன்பின்பு, சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன், பாலியல் பலாத்காரத்திலும் வாலிபர் ஈடுபட்டு, மிரட்டியும் உள்ளார். சம்பவத்திற்கு பின்பு அந்த நபர் தப்பியோடி விட்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அன்றிரவு விவரம் அறிந்த சிறுமியின் தாயார், இதுபற்றி சீவ்ரி போலீசில் புகார் அளித்து உள்ளார். உடனடியாக போலீசார் விசாரணை நடத்தியதில், சொந்த ஊரான தமிழகத்திற்கு அந்த வாலிபர் தப்ப முயன்றது தெரிய வந்தது.

இதற்காக நாகர்கோவில் எக்ஸ்பிரசில் டிக்கெட் முன்பதிவு செய்த விவரங்கள் சி.சி.டி.வி. காட்சிகள் வழியே போலீசாருக்கு தெரிய வந்தது. இதனை அறிந்த போலீசார், மும்பையில் இருந்து எப்போது ரெயில் புறப்படும்? என அதற்கான நேரஅட்டவணையை பார்த்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, தாதர் ரெயில் நிலையத்தில், ரெயிலை பிடித்து அதில் ஏறிய அவர்கள், ஒவ்வொரு பெட்டியாக வாலிபரை தேடி சென்றுள்ளனர். போலீசாரிடம் அந்த நபரின் புகைப்படங்கள் கைவசம் இருந்துள்ளன.

அவற்றின் உதவியுடன் தேடி சென்றபோது, 7-ம் எண் கொண்ட படுக்கை வசதியுடைய பெட்டியில் வாலிபரை போன்ற நபர் பதுங்கியிருந்து உள்ளார். அவரை சந்தேகத்துடன் போலீசார் நெருங்கியுள்ளனர். ஆனால், போலீசாரை பார்த்ததும் வாலிபர் தப்பியோட முயற்சித்து உள்ளார். இதனால், அவரை உறுதிப்படுத்திய போலீசார், உடனடியாக பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது ரெயில், முலுண்டு மற்றும் தானே ரெயில் நிலையத்திற்கு இடையே சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த வாலிபர் கீழே குதித்து தண்டவாளத்தில் ஓடியுள்ளார். போலீசாரும் விடாமல் விரட்டி சென்று, அவரை பிடித்து சீவ்ரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட 3 மணிநேரத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அதன்பின் போலீஸ் காவலில் அவர் வைக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com