நண்பரின் மகள் பலாத்காரம்... டெல்லி குழந்தைகள் வளர்ச்சி துறை துணை இயக்குநர் சஸ்பெண்டு

டெல்லியில் மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை துணை இயக்குநர், நண்பரின் மகளை பல முறை பலாத்காரம் செய்த விவகாரத்தில் இன்று மாலைக்குள் அறிக்கை அளிக்க கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.
நண்பரின் மகள் பலாத்காரம்... டெல்லி குழந்தைகள் வளர்ச்சி துறை துணை இயக்குநர் சஸ்பெண்டு
Published on

புதுடெல்லி,

டெல்லி அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறையின் துணை இயக்குநராக இருப்பவர், அவருடைய நண்பரின் மகளை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு நண்பரின் மறைவை தொடர்ந்து, ஆதரவற்ற அவருடைய 14 வயது மகளை அரசு அதிகாரி தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். இதன்பின்பு 2021-ம் ஆண்டு வரை நண்பரின் மகளை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதில், தற்போது 12-ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி கர்ப்பிணியாகி உள்ளார். இதுபற்றி துணை இயக்குநரின் மனைவியிடம், மாணவி கூறியுள்ளார். ஆனால், அவரோ இந்த விவகாரம் பற்றி வெளியே கூற வேண்டாம் என கூறி மூடி மறைத்ததுடன், தனது மகனை அழைத்து சில மருந்துகளை வாங்கி வரும்படி கூறியுள்ளார்.

இதன்பின்பு வீட்டிலேயே, கருக்கலைப்பும் நடந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி டெல்லி போலீசில் அந்த மாணவி புகாரளித்ததன் பேரில் போலீசார் அரசு அதிகாரிக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பலாத்கார சம்பவத்திற்கு துணையாக இருந்த துணை இயக்குநரின் மனைவி மீதும் வழக்கு பதிவாகி உள்ளது.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்-மந்திரியான கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கலந்து கொண்டார்.

அப்போது, மாணவி பலாத்கார சம்பவம் பற்றி கூறும்போது, இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து முடியும்வரை அந்த நபரை சஸ்பெண்டு செய்யும்படி தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டு உள்ளேன். இந்த விவகாரம் பற்றி இன்று மாலை 5 மணிக்குள் அறிக்கை ஒன்றை அளிக்கும்படியும் கேட்டுள்ளேன் என தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், டெல்லி போலீசார் அந்த அரசு அதிகாரியை இன்று கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com