

புதுடெல்லி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. டி.கே.ரங்கராஜன் தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்கக்கோரி 2018-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின் அடிப்படையில், தேசிய தேர்வு முகமை ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள், ஏ.எஸ். போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் இடையே மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும்போது, கொரோனாவால் நீட் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் நீட் தேர்வை அக்டோபர் 14-ந்தேதி (நாளை) நடத்த அனுமதிக்க வேண்டும். இந்த தேர்வுடன் சேர்த்து நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் 16-ந்தேதி வெளியிடப்பட வேண்டும் என வாதிட்டார்.
இதை ஏற்ற நீதிபதிகள், தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு, நீட் தேர்வை எழுத முடியாமல் போன கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்களுக்கும் அக்டோபர் 14-ந்தேதி நீட் தேர்வை நடத்த அனுமதிக்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகளை அக்டோபர் 16-ந்தேதி வெளியிடலாம் என உத்தரவில் தெரிவித்தனர்.