காஷ்மீர் எல்லையோர மக்களுக்கு நிவாரணம்- பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம்


காஷ்மீர் எல்லையோர மக்களுக்கு நிவாரணம்- பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம்
x

பாகிஸ்தானின் திடீர் மற்றும் கண்மூடித்தனமான தாக்குதலால் குடியிருப்பு பகுதிகளில் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது என்று ராகுல் காந்தி கூறினார்.

புதுடெல்லி,

ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் பீரங்கிகளால் தாக்கின. இதில் பூஞ்ச் உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் 28 பேர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.இந்த பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதைத்தொடர்ந்து அந்த மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு நேற்று அவர் கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவர், 'பாகிஸ்தானின் திடீர் மற்றும் கண்மூடித்தனமான தாக்குதலால் குடியிருப்பு பகுதிகளில் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன. பல்லாண்டுகளாக தங்கள் கடின உழைப்பால் கட்டப்பட்ட வீடுகள் கைவிட்டுப்போய் உள்ளதாக பலரும் கவலை தெரிவித்தனர்' என குறிப்பிட்டு உள்ளார்.

ஆழமான நெருக்கடியில் இருக்கும் அந்த மக்களின் வலியைப் புரிந்து கொண்டு அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து உதவிகளையும் வழங்குவது நமது கடமை எனக்கூறியுள்ள ராகுல் காந்தி, பாகிஸ்தானின் பீரங்கி தாக்குதலில் பாதிக்கப்பட்ட பூஞ்ச் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் மத்திய அரசு ஒரு உறுதியான மற்றும் தாராளமான நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் தொகுப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

1 More update

Next Story