தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டத்தால் ராஜினாமா: தர்மேந்திர பிரதானின் அரசியல் பயணம்

தர்மேந்திர பிரதான் விலகிய நிலையில் டெல்லி போராட்டக் களத்தில் இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தீவிரமடைந்த  மாணவர்கள் போராட்டத்தால் ராஜினாமா: தர்மேந்திர பிரதானின் அரசியல் பயணம்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் கடந்த மே மாதம் 5-ந் தேதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக கூறி, தேர்வு ரத்து செய்யப்பட்டது. பின்னர், நீட் மறுதேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்பட்டாலும், நீட் தேர்வு முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவிவிலக வேண்டும் என்ற முழக்கத்தை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்தது.

இந்த கோரிக்கையை முன்னிறுத்தி, கடந்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்தில் பங்கேற்ற லடாக்கை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

இதற்கிடையே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி "சலோ சன்சாத்" என்ற பெயரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பேரணியை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து 20 ஆயிரம் பேர் டெல்லி ஜந்தர் மந்தரில் குவிந்தனர்.

போராட்டக்காரர்கள் மீது தடியடி

20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த சோனம் வாங்சுக்கை போலீசார் வலுக்காட்டாயமாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில், நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி பேரணி செல்ல முயன்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி கூட்டத்தை கலைத்தனர். இதில், காவல் துறை மற்றும் போராட்டக்காரர்கள் தரப்பில் சிலர் காயம் அடைந்தனர்.

3 கோரிக்கைகள்

இந்த நிலையில், மத்திய மந்திரி ஜே.பி.நட்டா, போராட்டக்காரர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, 3 கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர். அதாவது, "நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். நீட் தேர்வால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும். சீரழிந்த கல்வித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்" என்பவைதான் அவை.

நாடாளுமன்றத்திற்கு உள்ளே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அமளி, நாடாளுமன்றத்திற்கு வெளியே ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் என பா.ஜ.க. அரசு சிக்கித் தவித்தது. தற்போது, வேறு வழியில்லாமல் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார்.

மத்திய கல்வி மந்திரி பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகிய நிலையில் டெல்லி போராட்டக் களத்தில் இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தர்மேந்திர பிரதானின் அரசியல் பயணம்

1983 - அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பில் இணைந்தார்.

2000 - ஒடிசாவின் பல்லஹாரா தொகுதியில் எம்.எல்.ஏ. ஆக வெற்றி.

2004 - ஒடிசா, தேவ்கார் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினர்.

2004 - 2006 - பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (BJYM) தேசியத் தலைவராக பணியாற்றினார்.

2014 - 2021 - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி.

2021 - திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை மந்திரி.

2021 ஜூலை முதல் - இன்று வரை - மத்திய கல்வித்துறை மந்திரி

2026 ஜூலை 25ம் தேதி - நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர் போராட்டம் வெடித்ததால் இன்று பதவி விலகினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com