மும்பையில் இரவு 11 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட தடை; பாதுகாப்பு பணியில் 35 ஆயிரம் போலீசார்

மும்பையில் இரவு மேல் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், 35 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பையில் இரவு 11 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட தடை; பாதுகாப்பு பணியில் 35 ஆயிரம் போலீசார்
Published on

மும்பை,

மும்பையில் ஆண்டு தோறும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும். கேட்வே ஆப் இந்தியா, கிர்காவ், ஜூகு கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகளவில் திரண்டு புத்தாண்டை கொண்டாடி மகிழ்வார்கள். இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில், கொரோனா பரவலை தடுக்கவும், இங்கிலாந்தில் உருவான புதுவகையான கொரோனா பரவலை தடுக்கவும், மராட்டியத்தில் மும்பை உள்பட மாநகராட்சி பகுதிகளில் ஜனவரி 5-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே போலீசார் மும்பையில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மும்பையில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக இரவு 11 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு, ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

இதுகுறித்து மும்பை போலீஸ் துணை கமிஷனர் விஸ்வாஸ் நாங்ரே பாட்டீல் கூறியதாவது:-

இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரவு 11 மணிக்கு முன் முடிக்கப்பட வேண்டும். விதிகளை மீறுபவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சட்ட ஒழுங்கை பாதுகாக்க வீதிகளில் 35 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஓட்டல்கள், உணவகங்கள், பார்கள், கேளிக்கை இடங்களை இரவு 11 மணி சரியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இரவு நேர ஊரடங்கை மீறி பொது மக்கள் கேட்வே ஆப் இந்தியா, மெரின் டிரைவ், கிர்காவ் கடற்கரை, ஜூகு, கோராய், மத் ஐலண்டு போன்ற இடங்களில் புத்தாண்டை கொண்டாட மாலை வேளையில் 4 பேருக்கு கீழ் சிறு சிறு குழுவினராக வர வாய்ப்பு உள்ளது. ஆனால் கூட்டமாக கூடுவதற்கு அனுமதி கிடையாது. எனவே அதை தடுக்கும் வகையில் அந்த பகுதிகளில் அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதேபோல இந்த ஆண்டு படகு மற்றும் கட்டிங்களின் மொட்டைமாடிகளில் புத்தாண்டு கொண்டாடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கு விதிகளின் கீழ் குடும்பத்தினரோ அல்லது 4 பேருக்கு கீழ் வெளியே வந்தால் எந்த பிரச்சினையும் இல்லை.

இதற்கிடையே புத்தாண்டில் பெண் துன்புறுத்தப்படுவதை தடுக்க ஈவ்-டீசிங் தடுப்பு குழுவினர் நகரின் பல்வேறு பகுதிகளில் சாதாரண உடையில் பணியில் இருப்பார்கள். மேலும் பயங்கரவாத தாக்குதல்கள் அச்சுறுத்தலுக்கு ஏற்ற வகையிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல எல்லா ஆண்டுகளையும் போலவும் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க போக்குவரத்து பிரிவு போலீசாரும் நகரின் முக்கிய இடங்களில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள் என மற்றொரு போலீஸ் அதிகாரி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com