ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடங்கியது

ராய்ட்டர்ஸ் டெக் நியூஸ், ராய்ட்டர்ஸ் பேக்ட் செக், ராய்ட்டர்ஸ் ஆசியா மற்றும் ராய்ட்டர்ஸ் சீனா ஆகியவை இந்தியாவில் கிடைக்கப்பெறுகின்றன.
புதுடெல்லி,
சர்வதேச செய்தி வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில், இதன் எக்ஸ் வலைதள கணக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.
இதுபற்றி மத்திய அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, அதன் எக்ஸ் கணக்கை தடை செய்யும்படி எங்கள் தரப்பில் இருந்து எந்த கோரிக்கையும் விடப்படவில்லை. எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அதனை சரி செய்வதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் அது சரியாகும் என கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பல்வேறு கணக்குகளுடன் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் கணக்கை தடை செய்ய கோரி வலியுறுத்தப்பட்டன. ஆனால், கட்டாயப்படுத்தப்படவில்லை. அப்போது இந்தியாவில் பல்வேறு கணக்குகள் முடக்கப்பட்டன. ஆனால், ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு முடக்கப்படவில்லை.
இந்நிலையில், எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் நிறுவனம், இந்த கோரிக்கைக்கு தற்போது செயலாற்றி உள்ளது. இந்நிலையில், ராய்ட்டர்ஸ் கணக்கு முடக்கத்திற்கு மத்திய அரசின் அப்போது மேற்கொள்ளப்பட்ட வலியுறுத்தல் காரணமில்லை என்ற நிலையில், முடக்கத்திற்கு விளக்கமளிக்கும்படி எக்ஸ் நிறுவனத்திடம் அரசு கேட்டுள்ளது. தடையை நீக்கவும் கேட்டு கொண்டுள்ளது.
எனினும் ராய்ட்டர்ஸ் டெக் நியூஸ், ராய்ட்டர்ஸ் பேக்ட் செக், ராய்ட்டர்ஸ் ஆசியா மற்றும் ராய்ட்டர்ஸ் சீனா ஆகியவற்றின் எக்ஸ் செய்திகள் இந்தியாவில் கிடைக்கப்பெறுகின்றன.
ஆனால், கோர்ட்டு உத்தரவு அல்லது உள்ளூர் சட்டங்களின்படி இந்த முடக்கம் அவசியம் ஆகியுள்ளது என ராய்ட்டர்ஸ் நிறுவன எக்ஸ் தளத்தில் அதற்கான விளக்கமும் தரப்பட்டு உள்ளது.