டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு - வாகனங்கள் தடுத்து நிறுத்தம்; மேம்படுத்தப்பட்ட 2-வது கட்ட செயல் திட்டம் அமல்

சிங்கு எல்லையில், பி.எஸ்.6 தர நிர்ணயத்திற்கு உட்படாத வாகனங்களை நிறுத்தி, திருப்பி அனுப்பும் பணியும் நடந்து வருகிறது.

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு - வாகனங்கள் தடுத்து நிறுத்தம்; மேம்படுத்தப்பட்ட 2-வது கட்ட செயல் திட்டம் அமல்
Published on: 

புதுடெல்லி

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள சூழலில், மேம்படுத்தப்பட்ட 2-வது கட்ட செயல் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

டெல்லியில் குளிர்காலம் நெருங்க கூடிய சூழலில், காற்று மாசு மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட காற்றில் மாசு அதிகரித்து பொதுமக்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பல ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வருகிறது.

இந்த சூழலில், டெல்லியில் மாசு கட்டுப்பாட்டை குறைக்க முதல்-மந்திரி ரேகா குப்தா தலைமையிலான அரசு பல வழிமுறைகளை கையாண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேரை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் தடை

இதேபோன்று, டெல்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இது கடந்த அக்டோபர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்புக்கு வாகனங்கள் வெளியேற்றும் மாசுக்களும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. அதனால், பி.எஸ்.6 தர நிர்ணயத்திற்கு உட்படாத வாகனங்களுக்கு டெல்லியில் அனுமதி இல்லை. இந்த நடைமுறை நவம்பர் 1-ந்தேதி முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்

பி.எஸ்.6 தர நிர்ணயத்திற்கு உட்பட்ட வாகனங்களாக இருந்தபோதும், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்களையும் உடன் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவுக்கு சென்றுள்ளது. கடந்த 31-ந் தேதி 117 ஆக இருந்த காற்றின் தரக்குறியீடு, நேற்று முன்தினம் 261 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் அதிகரித்து 324 ஆனது. டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள சூழலில், மேம்படுத்தப்பட்ட 2-வது கட்ட செயல் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த செயல்திட்டம், அத்தியாவசிய தேவையின்றி ஜெனரேட்டர்கள் இயக்குவதை தடை செய்கிறது.

7,279 வாகனங்கள்

அதுபோல விறகு அடுப்பு, நிலக்கரி அடுப்புகள் பயன்படுத்துவதையும் தடுக்கிறது. கட்டுமான பணிகள், வாகனங்களுக்கான மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் போன்றவற்றுக்கு உள்ள கட்டுப்பாடுகள் அப்படியே தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, சிங்கு எல்லையில், பி.எஸ்.6 தர நிர்ணயத்திற்கு உட்படாத வாகனங்களை நிறுத்தி, திருப்பி அனுப்பும் பணியும் நடந்து வருகிறது. இதில், 1-ந்தேதி மட்டும் 7,279 வாகனங்களை போலீசார் சோதனை செய்தனர். அவற்றில் 714 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளன.

இந்த பணிக்காக அச்சு, சமூக ஊடகங்களை டெல்லி போலீசார் பயன்படுத்தி வருவதுடன், டெல்லி எல்லையில் எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டு உள்ளன. துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

X