நாடு முழுவதும் அதிகரிக்கும் விலைவாசி: மத்திய அரசுக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி

நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசிக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
காங்கிரஸ்
Published on: 

தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே பிஸ்தா, பாதாம், வால்நட், பேரீட்சை உள்ளிட்ட உலர் பழங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக ஆங்கில நாளேடு ஒன்றில் செய்திகள் வெளியானது. இந்த செய்தி தொடர்பான புகைப்படத்தை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மோடி அரசின் பாதுகாப்பில் விலைவாசி என்ற அரக்கி மக்களை வாட்டுகிறது. தீபாவளி என்பது மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய பண்டிகையாக இருந்தாலும், விலைவாசி உயர்வு நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களின் பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளிக்கு முன்பே பணவீக்கம் ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சியை சமூகத்தின் அனைத்து தரப்பினரும் உணர்ந்து வருகின்றனர். உலர் பழங்களின் விலை 20 சதவீதம் முதல் 70 சதவீதம் வரையிலும், பிஸ்தா விலை 70 சதவீதம் வரையிலும், பாதாம் விலை 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலும் உயர்ந்துள்ளது. முந்திரியின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

அரசுத் தரவுகளை பயன்படுத்தி விலைவாசி உயர்வின் தாக்கத்தை மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதன் பாதிப்பை ஒவ்வொரு இந்தியரும் அனுபவித்து வருகின்றனர். பணவீக்கத்தில் இருந்து எப்போது நிவாரணம் கிடைக்கும் என்பதை அரசு விளக்க வேண்டும். அதேபோல், சாதாரண குடும்பங்களின் பொருளாதாரச் சுமைக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்பதையும் மத்திய அரசு விளக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com