

அம்பாலா,
ஆப்கானிஸ்தானை முற்றிலுமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலீபான் பயங்கரவாதிகள், நாட்டின் வர்த்தக துறையில் பல மாற்றங்களை தொடங்கி உள்ளனர். அந்தவகையில் உலர் கனிகளின் ஏற்றுமதியை அவர்கள் நிறுத்தி உள்ளனர். இதனால் இந்தியாவில் அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பஞ்சாப்பில் இந்த பழங்களின் வர்த்தகம் அதிகமாக உள்ளது. தற்போது வரத்து குறைந்திருப்பதால் அங்கு உலர் பழங்களின் விலை அதிகரித்து உள்ளது.
அந்த வகையில் அத்திப்பழத்தின் விலை கிலோ ரூ.500-ல் இருந்து ரூ.850 வரை அதிகரித்து உள்ளது. உலர் திராட்சை ரூ.450-ல் இருந்து ரூ.700 ஆகவும் விலை ஏறியிருக்கிறது. இதைப்போல மிகவும் மலிவாக கிடைத்து வந்த பேரீச்சம் பழத்தின் விலையும் அதிகமாக உள்ளது. கிலோ ரூ.500-க்கு விற்பனை ஆகி வந்த பாதாமின் விலை ரூ.850 ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் மக்களிடையே இந்த பொருட்களை வாங்குவதற்கான ஆர்வம் குறைந்திருக்கிறது.