

புதுடெல்லி,
நாட்டில் தற்போது திரவநிலை எரிவாயு (எல்.பி.ஜி.) இறக்குமதி முனையங்களில் இருந்து சுத்திகரிப்பு ஆலைகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதுபோல சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் ஆலைகளுக்கும் லாரிகளிலேயே கொண்டு செல்லப்படுகிறது. சாலை மார்க்கத்தில் இவை கொண்டு செல்லப்படுவதால் போக்குவரத்தில் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அது மட்டுமின்றி ஆபத்தான ஒரு பயணமாகவும் இருக்கிறது.
இதனை தவிர்க்க இறக்குமதி முனையங்கள், சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் நிரப்பு ஆலைகள் ஆகியவற்றை குழாய் வழி மூலம் இணைக்க திட்டம் தீட்டப்பட்டது. டேங்கர் லாரிகளில் எடுத்துச் செல்லாமல் இறக்குமதி முனையங்களில் இருந்தே எல்.பி.ஜி. குழாய்கள் வழியாக கொண்டு செல்லப்பட்டு விடும். இதனால் எந்த பிரச்சினையும் ஏற்படாது.
இந்த திட்டத்தை இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் முன்னெடுத்து உள்ளது. இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக. 9 எல்.பி.ஜி. குழாய் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இந்த குழாய் வழிக ளுக்கான ஏலத்தை அது நடத்தி இருக்கிறது.
இதில் தற்போது, 4 வழித்தடங்களுக்கான ஏல முன்மொழிவுகள் இறுதி செய்யப்பட உள்ளன. இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. இந்த குழாய் வழி அமைப்பின் மொத்த நீளம் 2,500 கி.மீ. ஆகும். இது செர்லபள்ளி-நாக்பூர், ஷிக்ராபூர்-ஹூப்ளி-கோவா, பாரதீப்-ராய்ப்பூர் மற்றும் ஜான்சி-சிதர்கஞ்ச் ஆகிய வழித்தடங்களில் அமைக்கப்படுகிறது. இதற்கான உத்தேச முதலீடு ரூ.12,500 கோடி ஆகும்.
இந்த திட்டம், தடையற்ற, அதிக அளவிலான எல்.பி.ஜி. போக்குவரத்தை சாத்தியமாக்கும் என்றும், வினியோகச் சங்கிலியில் பாதுகாப்பையும், செயல்திறனையும் மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மற்ற போக்குவரத்து முறைகளை விட மிகவும் சிக்கனமானதாகவும் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.