பெங்களூரு மாநகராட்சியில் ரூ.1,700 கோடி வளர்ச்சி பணிகள் நிறுத்தம்

பெங்களூரு மாநகராட்சியில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட ரூ.1,700 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 5 மாதங்களாக புதிதாக எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறாமல் உள்ளது.
பெங்களூரு மாநகராட்சியில் ரூ.1,700 கோடி வளர்ச்சி பணிகள் நிறுத்தம்
Published on

பெங்களூரு:-

தேர்தலுக்கு முன் அறிவிப்பு

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பா.ஜனதா ஆட்சியில், பெங்களூருவில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அரசு நிதி ஒதுக்கி இருந்தது. அதன்படி, பெங்களூருவில் பல இடங்களில் பணிகளும் தொடங்கப்பட்டு இருந்தது.

பின்னர் கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்த விதிமுறைகள் அமலுக்கு வந்தால், பெங்களூரு மாநகராட்சியில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் அனைத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. சட்டசபை தேர்தல் முடிந்து புதிய அரசும் பதவி ஏற்றுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலில் இல்லை.

ரூ.1,700 கோடி மதிப்பு

ஆனாலும் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்ட பணிகள் எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை. அதன்படி, பெங்களூருவில் சுமார் ரூ.1,700 கோடிக்கும் மேலான வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது கடந்த 5 மாதங்களாக பெங்களூருவில் பழைய பணிகளுடன், புதிதாக கூட எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

சில பணிகளுக்கு டெண்டர் மட்டும் விடப்பட்டு இருப்பதும், இன்னும் சில பணிகள் டெண்டர் முடிந்திருந்தும், சில திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டும் என ரூ.1700 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் இருக்கிறது. இவற்றில் கல்வி, சுகாதாரம் சம்பந்தப்பட்ட பணிகள் கூட பாதியில் நிறுத்தப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. அரசின் அனுமதி கிடைக்காத காரணத்தால், அந்த பணிகள் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com