கடந்த 2 நிதி ஆண்டுகளில் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு ரூ.261 கோடி செலவு

படி மற்றும் வசதிகளுக்காக 2024-25 நிதியாண்டில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக ரூ.98 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.
கடந்த 2 நிதி ஆண்டுகளில் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு ரூ.261 கோடி செலவு
Published on

போபால்,

மாநிலங்களவை எம்.பி.க்களின் சம்பளம், படிகள் மற்றும் பல்வேறு வசதிகளுக்காக கடந்த 2 நிதியாண்டுகளில் ரூ.261 கோடிக்கும் அதிகமாக அரசு செலவிட்டு உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம்

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்தர் சேகர் கவுர் என்பவர் நாடாளுமன்ற மாநிலங்களவை செயலகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2024-25 மற்றும் 2025-26 ஆகிய நிதியாண்டுகளில் மாநிலங்களவையில் எம்.பி.க்களுக்கு செய்யப்பட்ட செலவுகள் குறித்த தகவல்களை கேட்டிருந்தார்.அவருக்கு கிடைத்த பதில்களில் தெரியவந்த விவரங்கள் வருமாறு:

ரூ.261 கோடி

2024-25 மற்றும் 2025-26 ஆகிய நிதியாண்டுகளில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களின் சம்பளம், படிகள் மற்றும் பல்வேறு வசதிகளுக்காக ரூ.261 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டு உள்ளது. படி மற்றும் வசதிகளுக்காக 2024-25 நிதியாண்டில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக ரூ.98 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகை 2025-26 நிதியாண்டில் கணிசமாக உயர்ந்து ரூ.163 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ.65 கோடி கூடுதலாகும்.

சம்பள செலவு

2024-25-ல் எம்.பி.க்களின் சம்பளத்துக்காக ரூ.25.71 கோடிக்கும் அதிகமாகவும், மருத்துவச் செலவுகளுக்கு ரூ.8.2 கோடியும். சுற்றுப்பயணச் செலவுகளுக்கு ரூ.24.99 கோடியும், படிகளுக்காக ரூ.33.33 கோடிக்கும் அதிகமாகவும் செலவிடப்பட்டு உள்ளது. அதேபோல், 2025-26-ல் சம்பளச் செலவு ரூ.44.6 கோடியாகவும், மருத்துவச் செலவு ரூ.9.6 கோடியாகவும், பயணச் செலவு ரூ.36 கோடியாகவும், படிகள் ரூ.58.78 கோடிக்கும் அதிகமாகவும் இருந்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு சம்பளம், படிகள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணம், மருத்துவ வசதி, அலுவலக செலவுகள் உள்ளிட்ட 21 வகையான செலவுத் தலைப்புகளின் கீழ் அரசு வசதிகளை வழங்குகிறது. அச்சிடுதல், டிஜிட்டல் சாதனங்கள், எரிபொருள், பராமரிப்பு மற்றும் பிற நிர்வாகச் செலவுகளும் இதில் அடங்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com